இந்த வருடத்திற்கான கதிர்காம பாதயாத்திரையை மேற்கொள்ளும் காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயக தேவஸ்தானத்திலிருந்து வழியனுப்புவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் காரைதீவு நந்தவனப்பிள்ளையார் கதிர்காம பாதயாத்திரைக்குழு ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
நந்தவன சித்திவிநாயக ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கு.மகேஸ்வரக்குருக்கள் விசேட பூஜையினை நிகழ்த்தி வெள்ளி வேலை, வேல்சாமியிடம் கையளித்துள்ளனர்.
குறித்த வெள்ளிவேலை பக்தர்கள் வணங்கி வழிபட்டு ஹரோஹரா கோசம் முழங்க ஆலயத்தை சுற்றிவந்து வழியனுப்பியுள்ளனர்.
இந்து சமயவிருத்திச்சங்க தலைவர் எஸ்.மணிமாறன், முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் பாதயாத்திரை தொடர்பாக உரையாற்றியுள்ளதுடன், மகேஸ்வரக்குருக்கள் ஆசியுரை நிகழ்த்தியுள்ளனர்.
பாரம்பரிய மரபுரீரியான முறைப்படி பாதயாத்திரீகர்களுக்கு காப்பு அணிவித்து திருவமுது வழங்கப்பட்டு சாஸ்ட்டாங்க நமஸ்காரம் செய்து தேங்காய் உடைத்து வழியனுப்பினர்.
காரைதீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பக்தர்களை வழியனுப்பிய இந்நிகழ்வில் ஆலயதர்மகர்த்தாக்கள், இந்துசமய பிரதிநிதிகள் இந்து ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
காரைதீவிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் செல்லும் வேல்சாமி குழுவினர் ஒருவார காலம் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் தங்கியிருந்து சகல ஆயத்தங்களையும் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 17ஆம் திகதி அதிகாலை சந்நிதியிலிருந்து கதிர்காமத்திற்கான 46வது பாதயாத்திரை பக்திபூர்வமாக ஆரம்பமாகின்றது என மன்றச்செயலாளர் கு.ஜெயராஜி குறிப்பிட்டுள்ளார்.