ஒரு நாடு, கொரோனாவை திறம்பட சமாளித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெற்றுள்ளது.
அந்த நாடு... கனடா! உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொரோனாவுக்கெதிராக போராட கனடா எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளுக்காகவும், மக்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளமைக்காகவும் அது பாராட்டப்படவேண்டும் என்று கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
கனடாவின் Empire Clubக்காக உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ராஸ் அதானம், பல விடயங்களை மேற்கொள் காட்டியபோது, உலக சுகாதார அமைப்பின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக Ottawa அளித்துள்ள 440 மில்லியன் நன்கொடையை மேற்கோள் காட்டத் தவறவில்லை.
பல நாடுகள் இணைந்து ஒரு நோக்கத்திற்காக போராடுவதன் முக்கியத்துவத்தை இந்த கொரோனா நமக்கு நினைவூட்டியுள்ளது என்று கூறியுள்ள டெட்ராஸ் அதானம், எப்போதுமே கனேடியர்கள் அதில் தங்கள் பங்கை செவ்வனே செய்துள்ளார்கள் என்றார்.
கனடா இந்த கொள்ளை நோயை சீரியஸாக எடுத்துக்கொண்டு அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றார் அவர்.
தடுப்பூசி திட்டம் குறித்து பேசிய அவர், சில நாடுகளில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதைவிட, அனைத்து நாடுகளிலும் சிலருக்காவது தடுப்பூசி போடுவதுதான் சிறந்த வழி என்றார்.
அதே நேரத்தில், தடுப்பூசி மட்டுமே ஒரு சர்வரோக நிவாரணி ஆகிவிடாது என்று எச்சரித்த அவர், சமூக விலகல், காற்றோட்டமில்லா உள்ளரங்குகளை தவிர்த்தல் முதலான அன்றாட சுகாதார நெறிமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் என்றார்.