சமீபத்தில் கனடாவின் ஒட்டாவாவில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் 44 சதவிகிதத்தினர் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்தான்.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஒட்டாவாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்திலேயே உள்ள நிலையில், அதில் பாதி பிரச்சினைக்கு காரணம் இளைஞர்கள்தான் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
நேற்று 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 19.
ஒட்டாவாவைப் பொருத்தவரை கொரோனா அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி பாதித்துவரும் நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் பத்தில் நான்கு பேர் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்கிறார், ஒட்டாவாவின் தலைமை மருத்துவ அலுவலரான Dr. Vera Etches.

இளைஞர்கள் வெளியே செல்லும்போது, நமது சமூக வளையத்துக்குள் இல்லாத நண்பர்களை சந்திக்கும்போது இரண்டு மீற்றர் இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்கிறார் அவர்.

கடந்த வாரத்தை ஒப்பிட்டால், இந்த வாரம் கொரோனாவுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 48 அதிகரித்து 98ஆக உயர்ந்திருக்கிறது.
ஒட்டாவா மீண்டும் சகஜ நிலைக்கும் திரும்பும் முயற்சியின் மூன்றாம் நிலையில் உள்ளது, அதாவது தியேட்டர்கள், யோகா ஸ்டுடியோக்கள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.
ஆகவே, மக்கள் வயது வித்தியாசமின்றி சுகாதாரத்துறையின் பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம் என்கிறார் Etches.
மூடிய கட்டிடங்களுக்குள் கூடும்போது குறைவான எண்ணிக்கையிலானவர்கள் கூடுவது, புதிய நபர்களை தங்கள் சமூக வட்டத்தில் அனுமதிக்காமல் இருப்பது போன்ற விடயங்களை முடிந்தவரையில் பின்பற்றுவது நன்மை பயக்கும் என்கிறார் Etches.
