புலம்பெயர்தல் பிரச்சினையால் 20 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து கனடாவில் வாழ்கிறார் இந்திய வம்சாவளி நபர் ஒருவர்.
சர்ரேயில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினரான பரம்ஜித் பசந்தி (52), இந்தியரான சரண்ஜித் குலாரை 1999ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்.
அது காதல் திருமணம் அல்ல, குடும்பத்தார் ஏற்பாடு செய்த ஒரு திருமணம். 2000ஆவது ஆண்டு, தனது மனைவி கனடா வருவதற்காக அவரை ஸ்பான்சர் செய்தார் பரம்ஜித். ஆனால் அவரது மனைவி குலாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் போதுமான அளவுக்கு அறித்து வைத்திருக்கவில்லை, மனைவிக்கு கணவன் என்ன வேலை செய்கிறார் என்பது கூட தெரியவில்லை என்று கூறி, குடிமக்கள் மற்றும் புலம்பெயர்தல் அமைச்சகத்தின் புலம்பெயர்தல் மேல் முறையீட்டு பிரிவான IAD, குலாரின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.
2002ஆம் ஆண்டு மீண்டும் விண்ணப்பிக்க, அப்போதும் குலாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர், 2005, 2007, 2008, 2013 என தொடர்ந்து குலாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்த திருமணம் குலாரை கனடாவுக்கு கொண்டு வரும் ஒரே நோக்கத்தில் செய்யப்பட்டது, அது ஒரு உண்மையான திருமணம் அல்ல என IAD கருதுவதால், பரம்ஜித்தால் தன்னுடைய மனைவியுடன் இணையவே முடியவில்லை.
நான் இதை இப்படியே விட மாட்டேன், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்பேன், என் மனைவி தனியாக இந்தியாவில் இருக்கிறாள், தனியாக அவள், தானாகவே அவளுக்கான எல்லாவற்றையும் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்று கூறும் பரம்ஜித், கண்டிப்பாக நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வோம் என 100 சதவிகிதம் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கிறார்.
வரும் வாரங்களில் ஆறாவது முறையாக குலாரை கனடா அழைத்து வருவதற்காக விண்ணப்பிக்க இருக்கிறார் பரம்ஜித்.
2010க்கு முன் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு திருமணம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்றாலும், இனி இத்தகைய விதிகள் மாற்றப்பட வேண்டும் என கனேடிய சட்டத்தரணிகள் பலரும் குரல் கொடுத்துவருகின்றனர்.

