6 வயது மகளுக்காக சொந்த நாட்டை விட்டு வெளியேறி கனடா செல்லும் குடும்பம்... பரிதாப சம்பவம்

Report Print Santhan in கனடா

இந்தியாவில் வசித்து வரும் குடும்பத்தினர் ஆறு வயது மகளுக்காக நாட்டை விட்டு வெளியேறி, கனடாவில் வசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி அருகே இருக்கும் நொய்டாவில் வசித்து வரும் தம்பதி மனோஜ் ஓஜா-துலிகா. இந்த தம்பதிக்கு பரிதி என்ற 6 வயது மகள் உள்ளார்.

லட்சக்கணக்கில் வருமானம், சொந்த வீடு, நல்ல வேலை உறவினர்கள் என சகலவசதிகளுடன் இருக்கும் பரிதியின் பெற்றோர், தற்போது அவளுக்காக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.

இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக இருப்பது டெல்லியின் சுற்றுவட்டார பகுதியின் காற்று மாசு தான் என்று கூறப்படுகிறது.

அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டு தீபாவளிக்கு பிறகு பரிதிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மூச்சு விட சிரமம், தொடர் இருமல், சரியாக தூங்க முடியாமல் என அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் அவரின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் அழைத்து சென்று பார்த்த போது,

குழந்தையின் சுவாச நிலை மோசமடைந்திருப்பதாகவும், இதே நிலை தொடர்ந்தால்குழந்தைக்கு பெரும் இன்னல் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து பரிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பரிதியால் மற்ற குழந்தைகளைப் போன்று வெளியில் விளையாட முடியாமலும், பள்ளிக்கு அடிக்கடி செல்ல முடியாமல் விடுமுறை எடுப்பதினாலும், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்.

அதுமட்டுமின்றி, தற்போது டெல்லி சுற்றுவட்டாரப் பகுதியின் காற்று மாசு நிலை மேலும் மோசமடைந்திருப்பதால், குழந்தைக்கு அதிகப்படியான சுவாசப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக மீண்டும் மருத்துவர்களிடம் சென்ற பெற்றோர் இதற்கு தீர்வு தான் என்ன என்று கேட்ட போது, அதற்கு மருத்துவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது தான் குழந்தைக்கு நல்லது அதை தவிர வேறு எதுவும் தீர்வு அல்ல என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து கோவா செல்லாமா என்று அவர்கள் கேட்ட போது, அங்கு சென்றாலும் ஒன்றரை வருடத்தில் குழந்தையின் சுவாசப் பிரச்னைகள் மோசமடையும் என்று கூற, காற்று மாசு முற்றிலும் இல்லாத இடத்திற்கு செல்ல முடிவு செய்த அந்தக் குடும்பம், தற்போது கனடா செல்லும் நிலைக்கு வந்துள்ளனர்.

இந்தியாவை விட்டு பிரிய மனமில்லாவிட்டாலும், வேறு வழியின்றி முடிந்த வரை விரைவாக அவர்கள் கனடா செல்லவுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்