கனடாவின் புகழ்பெற்ற scuba diver ஒருவர் வெளிநாட்டில் விபத்தில் சிக்கி கடந்த இரண்டு மாதமாக உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயர்லாந்தின் கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவரும் அவரது மருத்துவ கட்டணம் மட்டும் இதுவரை 300,000 டொலர் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
கனடாவின் Baysville பகுதியில் குடியிருந்து வருபவர் 56 வயதான கிம் மார்ட்டின். இவரே அயர்லாந்தில் விடுமுறையை கழிக்க சென்ற இடத்தில் ஆகஸ்டு 8 ஆம் திகதி ஸ்கூபா டைவிங் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில் கிம் மார்ட்டின் படுகாயமடைந்து மார்புக்கு கீழே ஸ்தம்பித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு துணையாக அவரது வருங்கால மனைவி கிர்ஸ்டின் சாட்விக் இருந்து வருகிறார்.

முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் மறுபடியும் சகஜ நிலைக்கு திரும்ப நாளாகும் என சாட்விக் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கு செல்லும் முன்னர் மார்ட்டின் தமது காப்பீட்டு பத்திரத்தை புதுப்பிக்க தவறியதாக சாட்விக் தெரிவித்துள்ளார்.
மேலும், இதே நிலையில் மார்ட்டினை கனடாவுக்கு அழைத்துவர அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்,
அதற்கும் அதிக செலவாகும் எனவும் சாட்விக் தெரிவித்துள்ளார். தற்போது மார்ட்டினின் நண்பர்கள் அவரது மருத்துவ செலவுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட முன்வந்துள்ளனர்.

செப்டம்பர் 23 ஆம் திகதி மார்ட்டின் தமது 56-வது பிறந்த நாளை மருத்துவமனை படுக்கையில் வைத்தே கொண்டாடியுள்ளார்.
ஆகஸ்டு மாதம் மார்ட்டின் சாட்விக்கை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. விபத்தில் சிக்கிய பின்னரும் முடிவு செய்த திருமணத்தை முன்னெடுத்து செல்லவே விரும்பினர்.
ஆனால் மார்ட்டின் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் திருமணம் செய்து கொண்டால் போதும் என்ற முடிவில் இருப்பதாக சாட்விக் தெரிவித்துள்ளார்.