அடுத்த மாதம் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எப்படியாவது வெற்றி பெற்று விடுவது என கங்கணம் கட்டிக்கொண்டுள்ள கட்சிகள் ஏமாற்று வேலைகளை செய்யவும் தயங்கவில்லை.
தேர்தல் பிரச்சாரத்திற்காக தயாரிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில், கனடாவின் பசுமை கட்சியின் தலைவரான எலிசபெத் மேயின் படம் ஒன்றில் கோல்மால் செய்யப்பட்டிருந்த விடயம் வெளியாகியுள்ளது.
ஜூலை மாதம் வெளியான அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள அந்த படத்தில், கையில் மறுசுழற்சி செய்யத்தக்க ஒரு கப்புடன் நிற்கிறார் எலிசபெத். உண்மையில் அது ஜூலையில் எடுக்கப்பட்ட படம் அல்ல, அது கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட ஒரு படம்.
அப்போது, அவர் கையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் கப் ( disposable) ஒன்று இருந்துள்ளது.
ஆனால் அந்த படத்தை போட்டோஷாப் செய்துள்ள அவரது கட்சியினர், அந்த படத்தில் எலிசபெத்தின் கையில், மறுசுழற்சி செய்யத்தக்க ஒரு கப்பில், உலோக ஸ்ட்ரா ஒன்றும் உள்ளதுபோல் மாற்றம் செய்துள்ளனர்.
கிரீன்ஸ் கட்சி பிளாஸ்டிக்குக்கு எதிரான மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என்பதாலும், தற்போதைய சூழலில் உலகமே சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், பசுமை கட்சியின் தலைவர் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் கப் ஒன்றுடன் நின்றால் கட்சியின் பெயர் என்ன ஆவது!
ஆக, எலிசபெத்தின் கட்சியினர் அவரது படத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்தாற்போல் மாற்றிவிட்டார்கள்.
இந்த விடயம் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது குழுவினர் செய்த மோசமான செயலால் தான் அதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார் எலிசபெத் மே.
உண்மையில் தான் எப்போதுமே, 100 சதவிகிதம், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பவர் என்று கூறியுள்ள எலிசபெத், அந்த கப்பில் தங்கள் கட்சியின் லோகோவை சேர்க்கும் முயற்சியில் தனது கட்சியினர் அப்படி செய்திருக்கலாம் என்றும், ஒரிஜினல் படத்திலும் தான் எதையும் மறைத்திருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.