கனடாவில் துப்பாக்கி குண்டுக்கு இரையான இலங்கை இளைஞருக்கு இரங்கல் கூட்டம்: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்

Report Print Arbin Arbin in கனடா
533Shares

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இலங்கை இளைஞர் சாரங்கன் சந்திரகாந்தனுக்கு புதனன்று அஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஸ்கார்பரோ பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கடந்த வாரம் இளைஞர் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட 25 வயது சாரங்கன் சந்திரகாந்தனுக்கு இரங்கல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அவரது நண்பர்களும் உறவினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி இரவு 9.50 மணியளவில் மிடில்ஃபீல்ட் சாலைக்கு அருகிலுள்ள மெக்னிகால் அவென்யூ பகுதியில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் குற்றுயிராக சாரங்கன் சந்திரகாந்தன் மீட்கப்பட்டார்.

இரண்டு குண்டு காயங்களுடன் வாகனம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட அவர், மருத்துவ உதவிக்குழுவினர் முதலுதவி அளித்தும் பலனின்றி சம்பவயிடத்திலேயே மரணமடைந்தார்.

இச்சம்பவத்தில் இன்னொரு இளைஞரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் புதனன்று இரவு நடத்தப்பட்ட அஞ்சலி பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு இளைஞர் சாரங்கன் சந்திரகாந்தனை நினைவு கூர்ந்துள்ளனர்.

கைப்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்ட சந்திரகாந்தன், சம்பவம் நடப்பதற்கு முன்னர் நண்பர்களுடன் நேரம் செலவிட்ட பின்னரே சென்றுள்ளார் என அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டுமானத்துறையில் விருப்பம் கொண்ட சந்திரகாந்தன், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்ததாக அவரது நண்பர் கோபி நினைவு கூர்ந்துள்ளார்.

நண்பர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் கொண்ட சந்திரகாந்தன், பிரச்னைகளில் சிக்குபவரல்ல எனவும், எவரையும் பகைத்துக் கொள்ளும் சுபாவம் கொண்டவரல்ல சந்திரகாந்தன் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பில் Stoufville பகுதியில் குடியிருக்கும் 22 வயதான சரண்ராஜ் சிவகுமார் என்பவரை பொலிசார் திங்களன்று கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை மற்றும் கொலைக்கு முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்