உயிரியல் பூங்காவில் கரடியிடம் சிக்கிய சிறுமி: அபாய நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

Report Print Balamanuvelan in கனடா

கிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவில் சிறுமி ஒருவரை கரடி கடித்ததால், அவர் அபாய நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த உயிரியல் பூங்காவில் இரண்டடுக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் ஒரு மரத்தாலான சட்டங்களில் இரும்புச் சங்கிலி இணைக்கப்பட்ட ஒரு வேலியும், அதற்குள், ஒரு மீற்றர் உயரத்தில் இரும்புச் சங்கிலியால் ஆன மற்றொரு வேலியும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமி எப்படி அவ்வளவு தூரம் கையை நீட்டினாள் என்று தெரியவில்லை என விலங்குகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பிலிருக்கும் மேலாளர் மெனிட்டா பிரசாத் தெரிவித்தார்.

இதற்கு மேலும், பாதுகாப்பு அவசியமென்றால், அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் அவர்.

இந்த சம்பவத்தால் பூங்காவின் ஊழியர்கள் கவலையும் அதிர்ச்சியும் அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள மெனிட்டா, தான் அந்த பூங்காவில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை என்றும் தெரிவித்தார்.

சம்பவத்தையொட்டி நேற்று உயிரியல் பூங்கா மூடப்பட்டது. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த சிறுமி கம்பி வேலி வழியாக கையை நீட்டியதாகவும், கரடி அவரை கடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ள நிலையில், அந்த சிறுமி எப்படி கரடியிடம் இருந்து தப்பினாள் என்பது ஆச்சரியத்திற்குரிய விதமாகவே உள்ளது.

காரணம் கரடிகள் தம்மிடம் சிக்குபவர்களை அவ்வளவு எளிதில் எல்லாம் விட்டு விடாது. அந்த சிறுமி ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது தற்போதைய நிலைமை குறித்து, அதிகாரிகள் கூடுதல் தகவல் எதையும் வெளியிடவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்