தீவிரமாகும் கனடா மூவர் கொலை வழக்கு: புதிது புதிதாக வெளிவரும் தகவல்கள்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் இளம்ஜோடி ஒன்று கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடரும் நிலையில், கொலை செய்யப்பட்ட மூன்றாவது நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து புதிது புதிதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கனடாவுக்கு சுற்றுலா சென்ற இளம்ஜோடியான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Lucas Fowler (23) மற்றும் அவரது காதலியான அமெரிக்காவைச் சேர்ந்த Chynna Deese (24) ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

பின்னர் அவர்களது உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சற்று தொலைவில் முதியவர் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

இதற்கிடையில் வீட்டிலிருந்து வேலை தேடிச் செல்வதாக கூறிச் சென்ற Kam McLeod (19) மற்றும் Bryer Schmegelsky(18) என்னும் இரண்டு இளைஞர்களைக் காணவில்லை என அவர்களது குடும்பத்தார் பொலிசில் புகாரளித்திருந்தனர்.

வெவ்வேறு வழக்குகள் என பொலிசார் எண்ணியிருந்த இந்த இரண்டு வழக்குகளுக்கும் தொடர்பிருக்கலாம் என பின்னர் தோன்றிய நிலையில், காணவில்லை என அறிவித்திருந்த Kam மற்றும் Bryer ஆகிய இருவரையும் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கருதி பொலிசார் தேட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. மூன்றாவதாக கொலை செய்யப்பட்ட முதியவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.

அவரது பெயர் Leonard Dyck, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அடுத்ததாக கொலையாளிகள் என கருதப்படும் Kam மற்றும் Bryer பயன்படுத்திய வாகனம் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலை செய்த Kam மற்றும் Bryer இவர்கள்தான் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிசார் இருவரைக் கைது செய்தனர்.

ஆனால் அவர்கள் Tristan Schneider மற்றும் அவரது நண்பர் ஒருவர் என தெரியவந்ததையடுத்து பொலிசார் அவர்கள் இருவரையும் விடுவித்தனர்.

மேலும் புதிய தகவலாக கொலையாளிகள் என கருதப்படுபவர்களில் ஒருவரான Bryer என்பவருடன் முன்பு பள்ளியில் படித்த மாணவியான Madison Hempsted, அவரைக் குறித்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், பொதுவாக யாருடனும் பேசாமல் இருக்கும் Bryer, வாயைத் திறந்தாலே கொலை செய்வது, தற்கொலை செய்வது என்பது போன்ற வன்முறையான விடயங்களையே பேசிக் கொண்டிருப்பார் என்றும், ஆனால் அதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், அவர் மற்றவர்களை வேடிக்கை காட்டுவதற்காக கோமாளித்தனம் செய்வதாக எண்ணுவதுண்டு என்றும் தெரிவித்துள்ளார் Madison.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்