ஈராக்கின் மொசூல் நகரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஐவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனேடிய நபருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனேடியரான ஃபாரூக் கலீல் முகமது(51) என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டு நிரப்பிய லொறியை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதில் மூளையாக செயல்பட்டுள்ளார்.
ஈராக்கின் மொசூல் நகரில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம் அருகே முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில், அமெரிக்க ராணுவத்தினர் ஐவரும், ஈராக்கிய பொலிசார் இருவரும் கொல்லப்பட்டனர்.
ஃபாரூக் கனடாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் தீவிரவாத கொள்கைகள் கொண்ட குழு ஒன்றுடன் இணைந்து இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் நடைபெற்றுவந்த நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் அவரது தரப்பு வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் பிறந்த ஃபாரூக் கனேடிய குடியுரிமை பெற்றவராவார். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆல்பர்ட்டாவின் எட்மண்டன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.