கடந்த ஐந்து ஆண்டுகளில் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலுக்குள் சிக்க வைப்பது தொடர்பான 1,100 வழக்குகளை விசாரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒண்டாரியோவைச் சேர்ந்த Rhonelle Bruder, 16 வயதாக இருக்கும்போது தனக்கு விருப்பமில்லாத வீட்டிலிருந்து தப்பியோடினார்.
பல இடங்களுக்கு சென்றபின் டொராண்டோவை அடைந்த Bruderஐ அணுகிய ஒரு பெண் அவருக்கு ஒரு வேலை வாங்கித்தருவதாக கூறி நிர்வாண நடனம் ஆடும் ஒரு கிளப்பில் கொண்டு சேர்த்தார்.
தான் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொண்டிருப்பதை மெதுவாகத்தான் புரிந்து கொண்டார் Bruder.
Bruderஐப்போலவே ஏராளமான இளம்பெண்கள் இதேபோல் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுவதாக பொலிசார் தெரிவிக்கிறார்கள்.
டொராண்டோவில் மட்டுமின்றி கனடா முழுவதிலுமே இப்படி கடத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை, பரவும் கொள்ளை நோய் போல மிகவும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறார், மனித கடத்தலை தடுக்கும் பொலிஸ் குழுவைச் சேர்ந்த Tramontozzi.
12 வயதுள்ள சிறுமிகள் முதல் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்று கூறும் Tramontozzi, தங்களிடம் தற்போது 18 விசாரணை அதிகாரிகள் இருந்தபோதிலும் தங்களால் சமாளிக்க முடியவில்லை என்கிறார்.
கடந்த ஆண்டு இந்த குழு 280 வழக்குகளை விசாரித்து பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் தொழிலுக்குள் தள்ளியதற்காக 55 பேரை கைது செய்தது.
இந்த குழு அமைக்கப்பட்டதிலிருந்து 1,100க்கும் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்பட்டதோடு பாலியல் தொழிலில் சிக்கிய 300 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாக Tramontozzi தெரிவித்துள்ளார்.