தயவு செய்து இலங்கை அகதிகளுக்கு உதவுங்கள்: கெஞ்சும் பிரபலம்!

Report Print Balamanuvelan in கனடா

தான் உயிருக்கு அஞ்சி ஓடும்போது தனது நிலைமை கண்டு இரங்கி உதவியதற்காக உணவுக்கு கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவுமாறு அமெரிக்காவால் தேடப்படுபவரான எட்வர்ட் ஸ்னோடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யார் இந்த எட்வர்ட் ஸ்னோடன், எதனால் இலங்கை அகதிகளுக்கு பிரச்சினை? ஆலிவர் ஸ்டோன் என்னும் சினிமா எடுப்பவர் ஸ்னோடனைக் குறித்து ஒரு திரைப்படம் எடுத்தார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜன்சி குறித்த ரகசியங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவால் தேடப்படுபவர் ஸ்னோடன்.

அவர் அமெரிக்காவிலிருந்து தப்பி, நாடு நாடாக ஓடும்போது அவருக்கு உதவ முன்வந்தார் ராபர்ட் என்னும் கனேடிய வழக்கறிஞர்.

அப்படி ஸ்னோடனை அவர் மறைத்து வைப்பதற்காக ஹாங்காங்கிலுள்ள சில குடும்பங்களின் உதவியை நாடினார்.

மூன்று குடும்பங்கள், தாங்களே அகதிகளாக இருந்த நிலையிலும் தங்களைப்போன்ற ஒருவருக்கு உதவுவதாக நினைத்து ஸ்னோடனுக்கு உதவ முன் வந்தன.

இந்த சம்பவங்களை ஆலிவர் எடுத்த திரைப்படத்தில் கனேடியர்கள் பார்த்தனர்.

ஆனால் ஹாங்காங் அரசின் கண்களிலும் அந்த திரைப்படம் பட, அந்த மூன்று குடும்பங்களுக்கும் பிரச்சினை ஆரம்பித்தது.

தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு என அனைத்தையும் துண்டித்து, வேலை பார்க்க விடாமல் செய்து, கொடுத்து வந்த உதவித்தொகையையும் ஹாங்காங் நிறுத்த, சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலைமைக்கு ஆளாகின அந்த மூன்று குடும்பங்களும்.

ஆனால் கனடாவின் இரக்கக் கண்கள் அவர்கள் மீது பட, அந்த அகதிகளில் ஒருவரான பிலிப்பைன்சைச் சேர்ந்த ரோடலுக்கும் அவரது மனைவிக்கும் கனடா, அகதி அந்தஸ்து அளிக்க முன்வர, அவர்கள் இப்போது பாதுகாப்பாக கனடாவில் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஸ்னோடனை எதிரியாகப் பார்க்கும் அமெரிக்க தலையீடு காரணமாகவோ என்னவோ, திடீரென அகதிகளை மீட்கும் கனடாவின் நடவடிக்கையில் திடீர் தொய்வு ஏற்பட்டது.

அதனால் அந்த இலங்கை அகதிகள், மூன்று பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும் இன்னும் ஹாங்காங்கிலேயே மாட்டிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் இன்னும் அச்சுறுத்தலுக்குள்ளேயே வாழ்கிறார்கள். தற்போது ரஷ்யாவில் பாதுகாப்பாக இருக்கும் ஸ்னோடன் மீண்டும் அவர்களது நிலைமையை எடுத்துக் கூறி, எப்படியாவது அந்த இலங்கை அகதிகளை கனடா விரைந்து மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers