மோசமான வானிலையால் தாமதமான விமானம்: பயணிகளுக்கு விமானி அளித்த இன்ப அதிர்ச்சி

Report Print Balamanuvelan in கனடா

மோசமான வானிலை காரணமாக தாமதமான ஒரு விமானத்தின் விமானி தனது பயணிகளுக்கு சூழ்நிலை குறித்து விளக்கிக் கொண்டே இருந்ததோடு, எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஒன்றையும் அளித்துள்ளார்.

டொராண்டோவிலிருந்து ஹாலிஃபாக்ஸ் புறப்பட்ட ஏர் கனடா விமானம் ஒன்று, ஹாலிஃபாக்ஸை அடைந்தும் மோசமான வானிலை காரணமாக ஓடுபாதை மூடப்பட்டதால் தரையிறங்க இயலவில்லை.

உடனடியாக விமானி விமானத்தை Fredericton விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்ப, அங்கும் விமான நிலையம் பிஸியாக இருந்ததால், மீண்டும் பயணிகள் காத்திருக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை நன்கு புரிந்திருந்த விமானி, அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்தார்.

இதற்கிடையில் Oromoctoவிலுள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

Fredericton விமான நிலையத்தில் நிற்கும் ஒரு விமானத்திற்கே நேரடியாக பீட்சாக்களை டெலிவரி செய்ய வேண்டும் என்று தெரிவித்த அந்த குரல் நேரடியாக ஒரு விமானத்தின் விமானிகள் அறையிலிருந்து வருவதைப் புரிந்து கொண்ட உணவக மேலாளர் முதலில் அதை நம்பவில்லை.

பின்னர் அழைப்பை உறுதி செய்து கொண்ட அவர், அன்று பணியில் மூன்றே மூன்று பணியாளர்கள் இருந்தும், அவசர அவசரமாக 23 பெரிய சீஸ் மற்றும் பெப்பரோனி பீட்சாக்களை தயாரித்து அனுப்பினார்.

விமானப் பயணிகள் ஏற்கனவே விமானி தொடர்ந்து அளித்து வந்த தகவல்களால் ரிலாக்ஸாக அமர்ந்திருக்க, எதிர்பாராமல் இருக்கைக்கே வந்த பீட்ஸாக்கள் வேறு அவர்களை குஷிப்படுத்தியது.

இது விமானியின் வேலை என்று தெரிந்ததும் பயணிகள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். விமானத்தில் பயணித்த, பணியில் இல்லாத வேறு இரண்டு விமானிகளும் விமானப் பணியாளர்களுடன் இணைந்து பீட்ஸாக்களை பயணிகளுக்கு வழங்க, பயணிகள் சோர்வை மறந்து உற்சாகமானார்கள்.

ஹாலிஃபாக்ஸில் முனிசிபல் கவுன்சிலராக இருக்கும் ஒருவர் உட்பட விமானத்தில் பயணித்த பல பயணிகள் தங்களுக்கு நேர்ந்த இன்ப அதிர்ச்சி குறித்து ட்வீட்கள் பதிவிட்டார்கள்.

இறுதியாக காலதாமதமானாலும் உற்சாகம் குறையாத மக்களுடனும், அவர்களது பாராட்டு மழையின் நனைந்த விமானி மற்றும் விமானப் பணியாளர்களுடனும் நேற்று மதியம் Frederictonஇலிருந்து ஹாலிஃபாக்ஸுக்கு அந்த விமானம் புறப்பட்டது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்