உயிருக்கு தப்பி கனடா வந்த யாஸிடி இன பாலியல் அடிமைப்பெண்களுக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை

Report Print Balamanuvelan in கனடா

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமைகளாக இருந்து, பின்னர் கனடாவுக்கு அடைக்கலம் தேடி வந்த இளம்பெண்களை, தொலைபேசி வழியாக விடாமல் துரத்துகின்றன அச்சுறுத்தல்கள்.

2016ஆம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய இனப்படுகொலைக்கு தப்பி கனடா வந்த யாஸிடி இனப்பெண்கள் ஆறு பேர், பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இங்காவது நிம்மதியாக வாழலாம் என கனடாவில் அடைக்கலம் தேடி வந்த அந்த பெண்கள், மீண்டும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

அவர்கள் ஐ.எஸ் அமைப்பிடம் பாலியல் அடிமைகளாக இருந்தவர்கள். அவர்கள் தற்போது தொடர்ந்து வாய்ஸ் மெயில்களாலும் குறுஞ்செய்திகளாலும், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள் என அச்சுறுத்தப்பட்டு வருவதால் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த பெண்கள், பொலிசாரிடம் அந்த வாய்ஸ் மெயில்கள், குறுஞ்செய்திகள், பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை ஒப்படைத்துள்ளனர்.

அவற்றில் ஆயுதம் தாங்கிய ஐ.எஸ் அமைப்பினரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொலிசார் நிபுணர்கள் உதவியுடன் ஆராய்ந்தபோது, அதில் பேசியவர்கள் ஈராக், வட ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் பேசுவது போல் தெரிந்தது.

அந்த ஆதாரங்களின் அடிப்படையில் கனடா பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி சொல்லொணாத்துயரம் அனுபவித்த அந்த பெண்களில் ஒருவரான Adiba, ஆறு முறை தீவிரவாதிகளால் விற்கப்பட்டும் வாங்கப்பட்டும் இருக்கிறார்.

பாதுகாப்பு கிடைக்கும் என்று எண்ணி இங்கு வந்தோம், ஆனால் இந்த மிரட்டல்கள் வந்த பிறகு என்னால் பாதுகாப்பாக உணர முடியவில்லை என்று கூறும் Adiba, அச்சுறுத்தல்களும் அச்சமும் இன்றி வாழ விரும்புவதாக தெரிவிக்கிறார்.

இன்னொரு யாஸிடி இனப் பெண்ணாகிய Milkeya, தானும் தனது நான்கு வயது வயது மகனும், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் வந்து தங்களை கொண்டுபோய் விடுவார்களோ என்ற அச்சத்தில் வாழ்வதாக தெரிவிக்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்