குளத்தில் கவிழ்ந்த கார்! குழந்தையை மீட்க தாய் செய்த துணிகர செயல்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் சாலையில் இருந்த மேட்டில் மோதி உருண்ட கார் ஒன்று அருகிலிருந்த குளத்தில் கவிழ, தண்ணீருக்குள் சிக்கிக் கொண்ட தாய், உறைய வைக்கும் குளிரில் துணிந்து போராடி தன் மகளையும் மீட்டுக் கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Nova Scotiaவைச் சேர்ந்த Ashley Holland மற்றும் அவரது நான்கு வயது மகள் Macy இருவரும் பிறந்த நாள் பார்ட்டி ஒன்றிற்கு சென்று திரும்பும் வழியில், பனிக்கட்டி உறைந்ததால் ஏற்பட்டிருந்த மேட்டில் மோதி எதிர்பாராதவிதமாக அவர்களது கார் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டது.

அவர்களது போதாத நேரம் அங்கிருந்த குளத்திற்குள் சென்று விழுந்தது அந்த கார். விழுந்த வேகத்தில் காரின் ஜன்னல்கள் உடைய, உறைய வைக்கும் அளவுக்கு குளிராக இருந்த தண்ணீர் காருக்குள் திபுதிபுவென நுழைய ஆரம்பித்தது.

Ashleyயின் மனதில் ஒரே ஒரு விடயம்தான் ஓடிக் கொண்டிருந்தது. அது, பின் சீட்டில் இருக்கும் தன் மகளைக் காப்பாற்றுவதுதான். நான்கே வயதான Macyயோ பயந்து, அம்மா, நான் சாகப்போகிறேன் என்று அலறிக் கொண்டிருக்கிறாள்.

கடுங்குளிரில் தண்ணிரில் கார் மூழ்கிக் கொண்டிருக்க hypothermia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என பயந்து கொண்டே, தனது சீட் பெல்ட்டை விடுவித்த Ashley, காருக்கு வெளியே நீந்தி வந்து பின் பக்க கதவை திறக்க முயன்றிருக்கிறார்.

ஒரு வழியாக கதவைத் திறக்க, அவரது கையிலிருந்த சேறு மற்றும் பனியில் கை வழுக்க, கதவு திரும்பவும் மூடிக்கொண்டது.

ஒரு நிமிடம், அவ்வளவுதான், Macyயை க் காப்பாற்ற முடியாது என்ற அச்சம் ஏற்பட, வேகமாக மூழ்கிக் கொண்டிருக்கும் காரின் மீது ஏறி மறு பக்கம் வந்து, ஜன்னல் வழியாக மீண்டும் காருக்குள் நுழைந்து தாயும் மகளும் ஆளுக்கொரு பக்கம் சீட் பெல்ட்களை அகற்ற, மகளை தூக்கிக் கொண்டு நீந்தி காருக்கு வெளியே மகளையும் இழுத்துக் கொண்டு வந்து, பாதி நனைந்திருந்த மகளை கரையில் விட்டு விட்டு, மயங்கும் நிலைக்கு வந்திருக்கிறார் Ashley.

கடும் குளிரால் கைகால்கள் செயலிழந்து போக, எப்படியாவது மகளைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற முயற்சியில் சாலையைப் பார்க்கும்போது தூரத்தில் ஒரு கார் வருவதைக் கண்டிருக்கிறார்.

மகளிடம் ஓடு, ஓடு என்று கூற, புரிந்து கொண்ட Macy, சாலைக்கு ஓடி வந்து அந்த காரை கைகாட்டி நிறுத்தியிருக்கிறாள்.

அதற்குள் ஒரு வழியாக Ashleyயும் கரைக்கு வந்து விட்டார். அந்த காரிலிருந்த பெண் Macyயைக் கண்டு இறங்கி நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அவளையும் அவளது தாயையும் தன்னிடமிருந்த குளிருக்கு அணியும் சட்டையால் மூடிவிட்டு அவசர உதவி எண்ணுக்கு அழைத்திருக்கிறார்.

யார் செய்த புண்ணியமோ அந்த வழியாக ஒரு தீயணைப்பு வாகனம் வர, தீயணைப்பு வீரர்கள் விரைந்து தாயையும் மகளையும் கம்பளியால் மூடி பாதுகாப்பாக அமரவைத்து விட்டு, மருத்துவ உதவிக் குழுவை அழைத்திருக்கிறார்கள்.

அவர்களால் தண்ணீருக்குள்ளிருந்து தப்பி வர முடிந்தது ஒரு அற்புதம்தான் என்று தீயணைப்பு வீரர் ஒருவர் ஆச்சரியப்பட, நான் எப்படி அவ்வாறு செய்தேன் என்பது எனக்கே தெரியவில்லை என்று கூறும் Ashley, ஒரு பெற்றோராக இருக்கும்போது தானாகவே அந்த தைரியம் வந்து விடும் போலும், நம் பிள்ளைகளை காப்பாற்றுவதுதானே நமக்கு முக்கியம் இல்லையா என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers