கனேடிய சிறையிலிருந்து விடுவிக்கப்படும் சீனப்பிரபலம்: உடல்நலப் பிரச்சினைகளை காரணம் காட்டி வழங்கப்பட்ட ஜாமீன்

Report Print Balamanuvelan in கனடா

சீனாவின் பன்னாட்டு தொலைக்கட்டுப்பாடு மற்றும் மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Huawei Technologieயின் தலைமை பொருளாதார அலுவலரான Meng Wanzhou, வான்கூவரில் கனடா பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலப் பிரச்சினைகளை காரணம் காட்டி அவருக்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

ஒரு வாரத்திற்கும் மேலாக சிறையிலிருந்த Meng, முன்னர் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டது, திட உணவு உண்ணுவதில் உள்ள பிரச்சினைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி ஜாமீன் கோரியிருந்தார்.

ஈரான்மீது அமெரிக்கா விதித்திருந்த தடைகளை மீற தனது நிறுவனத்திற்கு உதவிய குற்றத்திற்காக, அமெரிக்க அதிகாரிகளின் கோரிக்கைக்கிணங்க, Meng, இம்மாதம் 1ஆம் திகதி வான்கூவரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் செவ்வாயன்று கனேடிய நீதிமன்றம் ஒன்று, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. Meng ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்ற நீதிபதியான Justice William Ehrcke, அவருக்கு 15 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அதன்படி Meng எப்போதும் கண்காணிப்பின் கீழ் இருப்பதோடு, ஒரு GPS ட்ராக்கிங் கருவியையும் அணிந்திருக்க வேண்டும்.அவரது பாஸ்போர்ட்டுகளை ஒப்படைப்பதோடு, 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணையத்தொகையும் செலுத்த வேண்டும். அத்துடன் இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை வீட்டை விட்டு வெளியேயும் அவர் செல்லக்கூடாது.

இந்நிலையில், இந்த வழக்கு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு காரணமாக அமையும் என்றால் தான் இந்த பிரச்சினையில் தலையிடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்கா இன்னும் Mengஐ நாடு கடத்துவதற்கான கோரிக்கையை முறைப்படி அளிக்கவில்லை.60 நாட்களுக்குள் அவ்வாறு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்றால், Meng விடுவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. Meng மீண்டும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers