133 நாட்களாக விமான நிலையத்தில் வாழும் அகதி: கனடாவின் உதவிக்காக காத்திருக்கும் பரிதாபம்

Report Print Balamanuvelan in கனடா

கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே 133 நாட்களாக வாழ்ந்து வரும் சிரிய அகதி ஒருவர் கனடாவின் உதவிக்காக காத்திருக்கிறார்.

பல நாடுகள் சுற்றிய சிரிய அகதியான Hassan Al Kontar கடைசியாக மலேசியாவை வந்தடைந்தார்.

அங்கும் அவரது தற்காலிக விசா காலாவதியானதால் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் விமான நிலையத்திலேயே அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

Hassan Al Kontar அவ்வப்போது ட்விட்டரில் தனது நிலை குறித்து அப்டேட் செய்து வருவதால் உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்கு உதவிகள் வரத்தொடங்கியுள்ளன.

அவர் மீது இரக்கம் காட்டும் பலரும் அவருக்கு பெருமளவில் பண உதவிகள் செய்து வரும் நிலையில், கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் அவருக்கு படுத்து உறங்க ஒரு மெத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

அவருக்கு கடைகளுக்கு செல்ல அனுமதி இல்லாததால், விமான நிலைய ஊழியர்கள் அவருக்கு காபியும், நொறுக்குத் தீனிகளும் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவையும் கொடுத்து உதவுகிறார்கள்.

ஆனால் என்ன, ஒரே வகையான உணவை 133 நாட்களாக சாப்பிட்டு வருகிறார் Hassan Al Kontar.

இன்னொரு பெரிய பிரச்சினை, அவருக்கு குளிக்கும், துணி துவைக்கும் இடங்களுக்கும் போகவும் அனுமதி இல்லாததால் அழுக்கு உடைகளையே அணிந்திருப்பதாகவும், அது அவருக்கே அவர் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கிறார் Hassan Al Kontar.

கனடாவில் வசிக்கும் Hassanஇன் உறவினர்கள் சிலர் பண நன்கொடைகள் பெற்று அவரை கனடாவுக்கு அகதியாக கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால் அதற்கான செயல் முறை முடிய இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். இதனால் Hassanஇன் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்கக் கோரும் 300,000 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கனடா அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கனடாவின் பதிலுக்காகக் காத்திருக்கும் Hassan எப்படியாவது இந்த விமான நிலையத்தை விட்டு வெளியே சென்று ஒரு சாதாரண மனிதனைப் போல வாழ ஏங்குகிறேன் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்