சக்கரநாற்காலியில் இருக்கும் ஈழத்தமிழரை தேடிச் சென்ற கனடா பிரபலம்

Report Print Jeslin Jeslin in கனடா

இலங்கையில் இடம்பெற்ற முத்தசாப்த கால யுத்தத்தில் பாதிப்புற்ற ஈழத்தமிழர்களுக்கு இன்றும் பாரிய உதவிகளை செய்து வரும் சக்கர நாற்காலியில் இருக்கும் மனிதாபிமானமுடைய, ஈழத்தமிழர் ஒருவரை கனேடிய பிரபலம் ஒருவர் தேடிச் சென்று சந்தித்துள்ளார்.

கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின் மகள் கரலைன் மல்ரூனியே இவ்வாறு ஈழத்தமிழர் கிருஸ்ணர் என்பவரை தேடிச்சென்று சந்தித்துள்ளதுடன், அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.

ஈழத்தில் இடம்பெற்ற கோர யுத்தத்தின் பிடியில் சிக்குண்டு எண்ணற்ற துயரங்களை சந்தித்தவர்களுக்கு யுத்தகாலத்தில் இருந்து இன்று வரை சக்கர நாற்காலியிலேயே இருந்து கொண்டு தம்மால் முடிந்த அனைத்து விதமான உதவிகளையும் செய்துகொண்டிருப்பவர் கிருஸ்ணர்.

மாங்குளத்தில் காணப்பட்ட முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் முன்னின்று இவர் செயற்பட்டுள்ளார்.

உண்மையில் நம் யாராலும் செய்திட முடியாத அளப்பறிய பணிகளையே அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆற்றி வருகின்றார்.

அவர் இருக்கக்கூடிய சக்கர நாற்காலியை ஒரு பிரம்மாண்ட வாகனமாக பாவித்து, அதனை கொண்டு மக்களுக்கு அவர் தொண்டாற்றுவது மனிதாபிமானத்தின் உச்சநிலை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

இதேவேளை ஈழத்தமிழர் கிருஸ்ணர் கனடாவில் இடம்பெறும் சமூகம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிப்பதுடன், அவர் பொது நோக்கு மற்றும் தூர நோக்கு சிந்தனை கொண்ட மனிதர் என அனைவராலும் அறியப்பட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு அற்புத மனிதரை தேடிச்சென்று அவருடன் கலந்துரையாடியுள்ளார் கனடாவின் முன்னாள் பிரதமரின் மகள் கரலைன் மல்ரூனி.

உலகத்தில் புறக்கணிக்கப்படும் மக்களுக்கு அடைக்கலம் தந்து, அவர்களை தமது நாட்டு பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளும் புகழ்மிக்க கனடா.

இந்நிலையில், முதன் முதலாக ஈழத்தமிழர்கள், கனடாவின் முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரூனியின் காலத்திலேயே அந்நாட்டிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

1986ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி 155 தமிழ் அகதிகள் கப்பல் மூலம் கனடாவின் நியூபின்லாந்து கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

அவர்களை கனடாவிற்குள் அனுமதிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தபோது கனடா குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளால் கட்டியெழுப்பப்பட்ட தேசம் என உறுதியாக நின்று அவர்களை இருகரம் நீட்டி அழைத்து, ஈழத்தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலையில் இருந்து தப்பி கனடாவிற்கு பெருமளவில் வருவதற்கான கதவை அகலத்திறந்து விட்டவர் கனடாவின் முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரூனி.

முன்னாள் பிரதமர் மல்ரூனியைப்போலவே அவரது மகள் கரலைன் மல்ரூனியும் இருப்பது அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்