வயதான பெண்ணை காப்பாற்றிய நல் உள்ளம்: கனடாவில் நெகிழ்ச்சி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த வயதான பெண்மணியை காப்பாற்றி குடும்பத்தினரிடம் ஒப்படைத்த நபருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கனடாவின் Ottawa பகுதியைச் சேர்ந்தவர் Penny Tasco, சம்பவதினத்தன்று தனது காரின் மீது எவ்வளவு பனி பெய்துள்ளது என்பதை அறிய ஜன்னல் வழியாக சாலையை எட்டிப் பார்த்தார்.

அங்கே சுமார் 80 வயது மதிக்கத்தக்க வயதான பெண் ஒருவர் குளிர் கால ஆடை எதுவுமின்றி வெறும் பைஜாமாவும் காலுறையும் மட்டும் அணிந்து சாலையில் நடுங்கிக்கொண்டு நிற்பதைக் கண்டார்.

அடுத்து என்ன செய்வது என்றுகூட அவர் யோசிக்கவில்லை, அடுத்த நொடி கதவைத்திறந்து வெளியே ஓடிய அவர் அந்தப்பெண்ணை வீட்டுக்குள் அழைத்து வந்து அவரை தனது சட்டையால் மூடி குளிர் போக்குவதற்காக மூட்டப்பட்டிருந்த அடுப்பின் அருகில் அமரவைத்தார்.

விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவரைப் பரிசோதித்தனர்.

குளிரால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் நல்ல நிலைமையில் உள்ளதாகத் தெரிவித்த அவர்கள், சரியான நேரத்தில் உதவிய Penny Tascoவை “நல்ல சமாரியன்” என்று புகழ்ந்து பாராட்டினர்.

பாராட்டைக் கேட்டு நாணமடையும் Penny Tasco, தான் புகழ்ச்சிக்காக இதை செய்யவில்லை என்று கூறுகிறார்.

தனது நண்பர்களின் வற்புறுத்துதலின் பேரிலேயே பேட்டிக்கு ஒப்புக்கொண்ட அவர், இதைப் பார்த்து மற்றவர்களும் பிறருக்கு உதவவேண்டும் என்பதற்காகவே பேட்டிக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறுவதோடு, உலகம் மோசமானதுதான் ஆனால் அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள், உங்கள் பெற்றோருக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

பின்னர் Ottawa பொலிசார், மீட்கப்பட்ட பெண்ணை பத்திரமாக அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்