சூடு பிடிக்கும் மார்க்கம்-தோன்கில் வேட்பாளர் தேர்தல்

Report Print Aravinth in கனடா
53Shares

தான் கட்சி மாறுவதை ஒரு அறிக்கை மூலம் பகிரங்கப்படுத்தியிருக்கிறார் லோகன் கணபதி.

லோகன் கணபதியின் அந்த அறிக்கையால் லிபரல் கட்சியின் மூத்த தமிழ் உறுப்பினர்கள் பலரும் சீற்றம் கொண்டுள்ளதமை இப்போது காணக்கூடியதாக உள்ளது.

“சென்ற ஆண்டு லிபரல் கட்சி மைக்கேல் சானின் வெற்றிக்கு லோகன் இரவு பகலாக உழைத்தவர். இப்போது மைக்கேல் சானுக்கு எதிராக அதேதொகுதியில் பழமைவாதக் கட்சிக்குக் கட்சி மாறி வாக்குக் கேட்கின்றார் லோகன் கணபதி; இந்த அரசியல் குத்துக்கரணத்தை மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்” என லிபரல் லிபரல் கட்சி ஆதரவாளர்களும் லிபரல் கட்சியின் தமிழ் முக்கியஸ்தர்கள் பலரும் தமது சீற்றத்தை தெரிவித்துள்ளனர்.

லிபரல் கட்சி தமிழ் முக்கியஸ்தர் ஒருவர் பகிரங்க அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

“லோகன் கணபதி ஒரே நேரத்தில் இருகட்சிகளில் அங்கத்தவராகி செயற்பட்டமையை ஜனநாயக விரும்பிகள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபரல் கட்சியில் அங்கம் வகித்து பலரது அரசியல் பிரவேசங்களுக்கு தடைபோட்டு அரசியல் சதுரங்கம் செய்த கவுன்சிலர் லோகன் கணபதி தனது கட்சி மாறும் நிலைப்பாடு, "ஒன்ராறியோ பி.சி. கட்சித் தலைவருடன் உள்ள 'நெருங்கிய நட்பு' காரணமாகவே" என நியாயப்படுத்தியுள்ளதை ஏமாற்று அரசியல் எனவும் அதில் விமர்சித்துள்ளனர்.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பல விடயங்கள் ஸ்காபரோ ரூஜ்ரிவர் தொகுதியின் ஒன்ராறியோ புறோக்கிறசிவ் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளர் தெரிவை தமிழர்களிடையே ஒரு விவாதப் பொருளாக மாற்றித் தந்திருக்கிறது. அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் படிப்பதற்காக அவற்றை தருகிறோம்.

“ஜனநாயக முறைக்கு எதிரான சீர்கேடுகளைச் சாடுவது லிபரல் கட்சிக்கும் அப்பால் அனைத்து மக்களினதும் சமுதாய பொறுப்பாகும்.ஆரோக்கியமான ஜனநாயக மரபுகளைக் கேலிக்கூத்தாக்கும் சிங்கள ஜனநாயக அரசியல் போன்றதே லோகன் கணபதியின் அறிக்கையும்.

ஜனநாயகம் என்ற பெயரில், நட்பு அரசியல் அடிப்படையிலேயே மகிந்தா ராஜபக்ஷவும் நெருங்கிய நண்பர்களையும் உறவினரையும் அரசியல் மூலதனம் ஆக்கினார். அதன் முடிவு அனைவரும் அறிந்ததுதானே.

இந்த திருகுதாளம் “நட்பு” என்ற பெயரில் கனடாவில் அரங்கேறுவதை நாம் ஏற்க முடியாது. ஜனநாயகம் ஒருபோதுமே நண்பர்கள் வட்டம் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவிபுரியும் “கிளப்” என மாற முடியாது. அப்படிக் காட்ட முனைவது சுத்தமான அரசியல் அசிங்கம்.

சுருங்கக் கூறின் ஏதாவது ஒரு கட்சித் தலைமையுடன் மிக நெருக்கமாக உள்ள நண்பர்கள்தான் இனிமேல் கனடாவில் பாராளுமன்ற உறுப்பினர்களாகலாம் என்பது சிங்கள ஜனநாயகத்தின் எதிரொலிப்பாகும்.

“கொள்கைப்பற்றுடன் பல ஆண்டு கட்சிக்கு விசுவாசமாக உழைப்பது வீண்வேலை", "சந்தர்ப்பம் வரும்போது ஏதாவது ஒரு கட்சிக்குத் தாவி தலைமையின் நட்புடன் பதவிகளை தட்டிச் செல்வதே சிறந்த வழி” என்பதுதான் லோகன் கணபதியின் அவரது அறிக்கையின் உட்கருத்து. இது மிகப் போலியான அரசியல் பாதை.

சமூகத்தலைவரும், நல்ல கல்வியாளனுமான தமிழன் நிர்மலன் வடிவேலுக்கு எதிராக ஸ்காபரோ நோர்த் தொகுதியில் லிபரல் கட்சியில் நொமினேசன் கேட்டு 2015 ஜனவரி மாதம் 25திகதி நடந்த லிபரல் கட்சித்தேர்தலில் தானும் தோற்று செயல்வீரர் நிர்மலனையும் தோற்கவைத்தவர்தான் கவுன்சிலர் லோகன் கணபதி.

பிறகு அதே வருடம் மே மாதம் 3ந்திகதி பிசி கட்சியின் பற்றிக் பிறவுன் வெற்றியடைந்ததும் அங்குபோய் பற்றிக் பிறவுண்னை சிக்க்கெனப்பிடித்துள்ளார்.

“திரு. பற்றிக் பிறவுன் அவர்களுடன் பல காலங்களாக நட்புடன் செயலாற்றி வந்தாலும், அவரது தலைமைத்துவப் போட்டியின்போதே அவருடனான உறவு ஒரு நெருக்க நிலையை அடைந்தது” என்றும் லோகன் தன் அறிக்கையில் இப்போது சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவரது இத்தொடர்பை லிபரல் கட்சியிலிருக்கும் எவரும் முன்பு அறிந்திருந்தார்களா? லிபரல் கட்சியில் எம்பி பதவிக்கு போட்டியிடும் வரை அங்கத்தவராக இருந்துகொண்டே பி.சி. கட்சியோடும் ரகசியமான முறையில் தொடர்பில் இருந்தார் என்பதை அவரது அறிக்கை மூலமாக அறியும்போது நீண்டகால லிபரல் கட்சி ஆதரவாளர்களாகிய தமிழ் மக்கள் நாம் அனைவரும் வெட்கித் தலை குனிகிறோம்.

லோகனின் விசுவாசமற்ற அரசியல்தனத்தால் இத்தகைய ஏமாற்று ஜனநாயக வழிகளைத் தமிழ்ச் சமூகம் அடியோடு தூக்கி எறியவேண்டும். இந்த சந்தர்ப்பவாத அரசியலை எமது பிள்ளைகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் நாம் ஒருபோதும் விட்டுச்செல்ல முடியாது.

இங்கு தமிழ்ச்சமூகம் கூட ஒரு சில தனிநபர்களின் பதவித் தேவை நோக்கி பாவிக்கப்பட வேண்டிய பொருள் என்று ஆகின்றது. தமிழர்கள் ஏமாற்றப்பட வேண்டிய பேர்வழிகளே என்பது இதன் உட்கிடை. தமிழர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் அல்ல என்பதை நிலைநிறுத்துவோம்.“ இவ்வாறு லிபரல் கட்சியினரின் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments