ஒரு பாட்டுப் பாடி 18,000 டொலர் குவித்து செந்தில் குமரன் சாதனை!

Report Print Deepthi Deepthi in கனடா

கடந்த ஞாயிறு மாலை Metropolitan Centre, Scarborough Canada மண்டபத்தில் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு நடத்திய இன்னிசை மாலை நிகழ்ச்சி மூலம் மொத்தம் டொலர் 50,000 ஆயிரம் திரட்டப்பட்டது.

கடந்த காலங்களில் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் மூலம் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி தாயகத்தில் துன்பத்தின் மத்தியில் அவலப்படும் பல உறவுகளுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்தவர் மின்னல் மியூசிக் செந்தில் குமரன்.

செந்தில் குமரன் பேசும் போது “நான் இந்த ஆண்டு மே மாதத்தில் வட கிழக்குக்கு சில உதவிகளை செய்ய சென்றிருந்தேன். அங்கே எங்கள் மக்கள் படும் துன்பங்களை நேரில் பார்த்து கவலை அடைந்தேன். நாங்கள் இங்கு வசதியாக வாழ்கிறோம். அந்த மக்கள் அப்படியல்ல. போரின் வடுக்களை சுமந்து நிற்கிறார்கள். அங்கே மனித உருவில் இருக்கும் தெய்வங்களைக் கண்டேன். இதன் பின்னர்தான் இந்த மக்களுக்கு மேலும் பல உதவிகளை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்” எனக் குறிப்பிட்டார்.

"என் மூன்று நிவாரண திட்டங்களுக்கும் உதவுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்த செந்தில் குமரன் மேடையில் மண்டியிட்டு இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற பாடலை மனமுருகப் பாடியதைக் கேட்ட மக்கள் கண்களில் நீர் மல்க, இதயங்களில் உணர்வு பொங்கிட மேடை ஏறி வரிசையாக அணி வகுத்து நின்று 18,000 ஆயிரம் டொலர்களை அள்ளி வழங்கினர்.

இந்த இன்னிசை மாலை நிகழ்ச்சியின் மூலம் போரின் வடுக்களைத் தாங்கி வட கிழக்கில் அல்லல்படும் எமது மக்களின் நல்வாழ்வுக்கு உதவும் கீழ்க்கண்ட 3 திட்டங்களை செந்தில் குமரன் நிறைவேற்ற இருக்கிறார்.

  • கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் மருத்துவத் திட்டம் (Mobile Medical Unit for the physically challenged (Via Northern Provincial Council Health Minister – Dr. P. Sathiyalingam)

  • முல்லைத் தீவு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத் திட்டம் (Livelihood assistance for women headed families (Via Mrs. Shanthi Sriskantharajah, MP)

  • மாணவர்கள் இடைவிலகலைத் தடுக்கும் திட்டம் (Prevention of School drop outs (Via S. Viyalendran, MP) இவை தாயகத்தில் முல்லைதீவு, கிளிநொச்சி மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் அடையாளப்படுத்திய உதவித் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்கொடை அளித்த பொதுமக்கள், பாடல்கள் பாடிய பாடகர்கள், லதான் (Lathan Brothers) இசைக் குழுவினர், ஊடகவியலாளர்கள், நிகழ்ச்சியை செவ்வனே தொகுத்து வழங்கிய சக்தி பரமலிங்கம், சிற்றுண்டிகளை அன்பளிப்பாகக் கொடுத்த சமூக புரவலர் திரு அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் (Quality Bakery) நிகழ்ச்சியின் வெற்றிக்குத் தோள்கொடுத்த அனைவருக்கும் செந்தில் குமரன் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்ததோடு அவர்களுக்கு விருதுகள் வழங்கியும் மதிப்பளித்தார்.

நிகழ்ச்சியை நடத்தத் தேவைப்பட்ட ஒலி, ஒளி, மண்டபம் ஒட்டிய செலவுகள் அனைத்தையும் செந்தில் குமரன் ஏற்றுக்கொண்டார்.

வரவு 100 டொலர், செலவு 50 டொலர் என்றில்லாமல் ‘செலவு முழுதும் எனதே, வரவு முழுவதும் நிவாரணத்துக்கே’ என்பது செந்தில் குமரனின் கோட்பாடு. இது வித்தியாசமானது மட்டுமல்லாமல் பாராட்டுக்கும் உரியது.

இந்த ஆண்டு செந்தில் குமரனனின் நிவாரண அமைப்பினால் பின்வரும் திட்டங்களுக்கு உதவி வழங்கப்பட்டது.

  • கிளிநொச்சி – முல்லைத்தீவு மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு சிறப்புக் கழிப்பறைகள், வவுனியா ORHAN நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு வடக்கு மாகாண சபையின் நல்வாழ்வு அமைச்சர் திரு ப. சத்தியலிங்கம் அவர்களால் கையளிக்கபட்டது. உதவித் தொகை ரூபா 11,91,194.60.

  • கிளிநொச்சி மாவட்டம் மாற்றுத் திறனாளிகளான முன்னாள் போராளிகள் 23 பேருக்கு சிறு தொழில், ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு ஆகிய தேவைகளுக்கு உயிரிழை என்னும் நிறுவனம் மூலம் ரூபாய் 12,59,223 திரு ஸ்ரீதரன், நா.உ அவர்களால் கையளிக்கப்பட்டது.

  • மட்டக்களப்பு மாவட்டம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் போராளிகள் என 17 பேருக்கு சிறு தொழில், ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு ஆகிய தேவைகளுக்கு மனித நேய கரங்கள் என்னும் நிறுவனத்துக்கு ரூபா 8,10,000 திரு ச. வியாழேந்திரன், நா.உ ஊடாகக் கையளிக்கப்பட்டது.

  • புதுக்குடியிருப்பு (முல்லைத்தீவு மாவட்டம்) பெண்கள் தலைமை தாங்கும் 10 குடும்பங்கள் மற்றும் 10 மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விவசாயக் கருவிகள் - உபகரணங்கள் என்பனவற்றை ஒளிரும் வாழ்வு என்னும் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. ஒளிரும் வாழ்வு நிறுவனத்துக்கு ரூபா 10,00,000 திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, நா.உ அவர்களால் கையளிக்கப்பட்டது.

  • மருதங்கேணி, வடமராட்சி கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் வாழும் பிள்ளைகளின் தொழில்நுட்ப அறிவினைக் கூட்ட கனடா கணினி பயிற்சி நிலையத்துக்கு ரூபா 636,776 திரு ஸ்ரீதரன், நா.உ அவர்களால் கையளிக்கப்பட்டது. இந்த நிலையம் மாவட்ட செயலாளர் திரு கனகராசா அவர்கள் மேற்பார்வையில் நடைபெறும்.

எமது தாயக உறவுகளின் துயர் துடைக்க கனடா வாழ் தமிழ் மக்கள் எப்போதும் அணியமாக இருக்கிறார்கள் என்பதற்கு வெற்றிகரமாகவும் உணர்வு பூர்வமாகவும் நடந்து முடிந்த செந்தில் குமரனின் இந்த நிவாரணம் இன்னிசை மாலை நிகழ்ச்சி கட்டியம் பகருகின்றது. இவரது சேவை தொடர்ந்தும் தாய் நாட்டுக்குத் தேவை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments