ஐ.எஸ் கொலைப் பட்டியல்: கனேடியர்கள் 151 பேரை குறி வைத்துள்ளதாக தகவல்

Report Print Arbin Arbin in கனடா
ஐ.எஸ் கொலைப் பட்டியல்: கனேடியர்கள் 151 பேரை குறி வைத்துள்ளதாக தகவல்
389Shares

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு சேகரித்து வைத்துள்ளதாக கூறப்படும் கொலைப் பட்டியலில் 151 கனேடியர்களின் பெயர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் உலகெங்கிலும் உள்ள 8,300 நபர்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஐ.எஸ். அமைப்பு சேகரித்து வைத்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கனேடியர்கள் 151 பேரில் பெரும்பாலும் பெண்கள் என தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஈடுபாடு காட்டும் நபர்களின் பெயர் முகவரிகளை அந்த அமைப்பு சேகரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியளிக்கும் இந்த தகவலை மத்திய கிழக்கு நாடுகளை மையமாக கொண்டு செயல்படும் MEMRI என்ற ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

பட்டியல் மிகவும் பெரிதாக இருப்பதால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அந்தந்த நாடுகளில் உள்ள சட்டத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

முன்னதாகவும் இதுபோன்ற பட்டியலை 9 முறை ஐ.எஸ் தீவிரவாத குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த பட்டியல்கள் குறிப்பிட்ட அதிகாரிகளை குறிவைத்து வெளியிடப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் பட்டியலில் பெரும்பாலும் சாதாரண மக்கள் என்பதாலும், குறிப்பாக கனேடியர்களில் பெரும்பாலானவர்கள் சிறு நகரங்களில் குடியிருந்துவரும் பெண்கள் என்பதாலும் இந்த பட்டியல் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்த பட்டியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனேடிய பொலிசார், பட்டியலின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக உள்ளதாகவும், பட்டியலில் குறிப்பிட்டிருப்பவர்களுக்கு நேரடி அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments