அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த இந்திய வம்சாவளி குடும்பம்: எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடு கடத்தப்பட இருந்த இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்த சம்பவம் நினைவிருக்கலாம்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார்.

அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது என்று கூறி, அவரது குடும்பத்தை நாடு கடத்த உத்தரவிட்டது அவுஸ்திரேலிய அரசு.

தனது உடல்நிலை தனது வாழ்வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய ராஜசேகரன், அரசு மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ளப்போவதில்லை என்று கூட கூறியிருந்தார்.

ஆனால் அவர்கள் இம்மாதம் (ஆகத்து) 21 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அரசு கூறிவிட்டது.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்ட ராஜ சேகரனின் மகளான வாணிஸ்ரீ ராஜசேகரன், புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தனது செய்தியாக ’நான் ஒரு அவுஸ்திரேலியர்’ என்னும் பாடலை பாடினார்.

அவர் பாடிய விதம் அங்கிருந்தோரை நெகிழச் செய்ததையடுத்து, நீங்கள் மட்டும் இந்த நாட்டுக்கு எதையாவது செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.

வாணிஸ்ரீ 12ஆவது வகுப்பு படித்து வரும் நிலையில், உடனடியாக அவர் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளதால், சிறந்த மாணவியாகவும், மாணவர் தலைவராகவும் திகழும் அவர், தனது ஆண்டிறுதித் தேர்வை எழுதாமலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியதால் குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் கவலையடைந்தனர்.

இதற்கிடையில், வாணிஸ்ரீ குடும்பத்தினரை நாடு கடத்தக்கூடாது என கோரி முன் வைக்கப்பட்ட மனு ஒன்றில் இரண்டே வாரங்களுக்குள் 90,000 பேர் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், தற்போது வாணிஸ்ரீ குடும்பத்தினருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

ஆம்! அவரது குடும்பத்தினருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அவர்கள் இனி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டியதில்லை!

வெள்ளியன்று இந்த மகிழ்ச்சியான செய்தி வந்ததாக தெரிவிக்கும் வாணிஸ்ரீ, தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

நான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறேன், என்னால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை என்று கூறும் வாணிஸ்ரீ, எனது தோளிலிருந்து பெரிய பாரம் இறங்கிவிட்டதுபோல் இருக்கிறது என்கிறார்.

தனது குடும்பத்தார் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூறும் வாணிஸ்ரீ, எல்லோர் முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடிகிறது, தங்களுக்கு உதவ எல்லோரும் முன்வந்தது பெரிய பாக்கியம் என்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்