அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரில் கருணைக் கொலை சட்டம் அமல்!

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

தீராத நோயினால் குணப்படுத்த முடியாமல் அவதிப்படுவோர், தங்களை கருணைக் கொலை செய்ய அரசிடம் அனுமதி கோரினால், இந்த சட்டங்களின் அடிப்படையில் மருத்துவர்களின் உதவியுடன் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த சட்டம் விக்டோரியா மாநிலத்தில் இன்று அமலுக்கு வந்துள்ளது. கருணைக் கொலை செய்யும்படி உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், மருத்துவர்களிடம் அனுமதி கேட்கும்பட்சத்தில், இதற்கான அனுமதியை அவர்கள் பெற வேண்டும்.

அதாவது வசிப்பிட ஆவணங்கள், பல மருத்துவர்களின் மதிப்பீட்டு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதியை பெற வேண்டும்.

ஆனால், 6 மாதங்களுக்கு மேல் உயிர்வாழ வாய்ப்பில்லை என்ற நிலையில் உள்ள முதியவர்கள் அல்லது கொடிய நோய் பாதிப்புக்கு (மோட்டார் நியூரான் நோய், மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ்) ஆளாகி ஒரு வருடம் மட்டுமே ஆயுட்காலம் கொண்டவர்களுக்கு மட்டுமே, இந்த சட்டத்தின் கீழ் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டில் 12 பேருக்கு கருணைக் கொலைக்கான அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 150 பேர் வரை இந்த சட்டத்தை பயன்படுத்தலாம் என்று விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers