நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் குடும்பம்: கடைசி முயற்சியும் தோல்வி

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

குயின்ஸ்லாந்தில் குடியிருக்கும் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படாமலிருக்க மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்புக்காவல் மையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்புடைய குடும்பமானது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Biloela நகரில் குடியிருந்த இவர்களை கடந்த 2018 மார்ச் மாதம், திடீரென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் அகதிகளுக்கு ஆதரவாக போராடுபவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், நாடு தழுவிய போராட்டத்திற்கும் வழிவகுத்தது.

மட்டுமின்றி குறித்த தமிழ் குடும்பத்தை வலுக்கட்டாயமாக நாடுகடத்தும் முடிவுக்கு எதிராக தொடர் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் அவுஸ்திரேலியாவில் அவர்கள் குடியிருக்க அனுமதிக்க கோரும் மனுவானது நீதிமன்றத்தால் டிசம்பர் மாதாம் நிராகரிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அன்று இந்த விவகாரம் தொடர்பில் ப்ரியா, நடேஸ் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த இவர்களின் இரு பிள்ளைகள் கோபிகா மற்றும் தருனிகா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உயர் நீதிமன்றமானது மறுப்பு தெரிவித்துள்ளது.

ப்ரியா மற்றும் நடேஸ் ஆகிய இருவரும் படகு மூலம் கடந்த 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தனித்தனியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.

ஆனால் இவர்களின் விசா காலம் முடிவடைந்த நிலையில் 14 மாத காலம் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு துவக்கத்தில், நடேஸ் தம்பதிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்பட்டன.

உள்விவகார அமைச்சரின் அலுவலகத்தின் வெளியேயும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நடேஸ் குடும்பத்தாருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் கடைசி கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடியதால் அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படுவது தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்