அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரில் வரலாறு காணாத கனமழை.. ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து! வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

சிட்னி நகரில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அலுவலகத்திற்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளானதாக கூறப்படுகிறது.

வழக்கமாக நவம்பர் மாதத்தில் சிட்னி நகரில் 84 மில்லி மீற்றர் அளவு மழை தான் பெய்யும். ஆனால், இன்று ஒரே நாளில் மட்டும் 106 மில்லி மீற்றர் அளவு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன் நகரில் உள்ள சுரங்க ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

AAP

விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழை நீர் சூழ்ந்ததால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல்வேறு விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. மீட்புப் பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தபோது, மரங்கள் முறிந்து விழுந்ததில் இரு பொலிசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலையில் இருந்து 12 பேரை மழையில் இருந்து மீட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், கனமழை மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானதாக தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய 6,600 பேர் மின்சாரம் இல்லாமல் அவதிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மழைபொழிவு மேலும் தீவிரமடையும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நகரில் பாயும் சிறிய நதிகளில் வெள்ளம் வரும் அபாயமும் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு குயின்ஸ்லாந்து, நார்த்தன் நியூ சவுத்வேல்ஸ், மவுரியா நியூகேஸில், சிட்னி, இலாவாரா, கிராப்டன், பிரிஸ்பன் ஆகிய நகரங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

AAP

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்