பங்குனி மாத ராசிப்பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

பங்குனி மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கு என்ன என்ன பலன்களை என்பதை பார்ப்போம்.

மேஷம்

ராசிநாதன் செவ்வாயின் ஆட்சி பலம் தொடர்வதால் உங்கள் பணிகள் எளிதாக நடந்தேறக் காண்பீர்கள். கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த விவகாரங்கள் இந்த மாதத்தில் முடிவிற்கு வரும். எதிர்காலத்தில் செய்ய உள்ள பணிகளுக்கான திட்டமிடுதலில் ஈடுபடுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். பொருள் வரவு நிலை சிறப்பாக இருந்து வரும். சேமிப்புகளில் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களுடன் உண்டாகும் கருத்து வேறுபாட்டினை பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது.

வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கக் கூடும். மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் அநாவசியமான பிரயாணங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் ஒரு சில தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். தாயார் வழி சொத்துக்களால் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் சிந்தனைகள் மற்றவர்களால் புகழப்படும். பிள்ளைகளால் பெருமைகொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும்.

உடல்நிலையில் கவனம் கொள்ளவேண்டியது அவசியம். வாழ்க்கைத் துணையின் செயல்கள் உங்கள் வெற்றிக்கு கூடுதல் வலு சேர்க்கும். செலவுகள் சற்று கூடுவதால் லேசான மன வருத்தம் தோன்றும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும், இயலாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்வதிலும் மனநிம்மதி காண்பீர்கள்.

அதே நேரத்தில் உதவி செய்யப்போய் உபத்திரவத்தை சந்திக்கும் சூழலும் உருவாகும். தொழில்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், தனக்குரிய சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் மனதினை ஆட்கொள்ளும்.

வியாபாரிகள் ஏப்ரல் மாதத்தின் முற்பாதியில் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைவார்கள். பெண்கள் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தனித்து செயல்படுவது உசிதமல்ல.

கலைத்துறையினர் தொழில்முறையில் தொடர் வெற்றியினைக் காண்பர். தனது தைரியத்தை நிரூபிக்கும் முயற்சியில் ஒரு சில சங்கடங்களை சந்திப்பீர்கள். சரிசம பலன்களைக் காணும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள் - மார்ச் 25, 26.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வாருங்கள்.

ரிஷபம்

இந்த பங்குனி மாதத்தின் முதல் வாரத்தில் இறங்கிய காரியங்களில் ஒரு சில இடைஞ்சல்களை சந்திக்க உள்ளீர்கள். எளிதாக நடந்து முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் சற்றே இழுபறியைத் தரக்கூடும். எடுத்த காரியத்தை நடத்தி முடிக்கும் வரை மன உளைச்சல் அதிகமாகக்கூடும். அதே நேரத்தில் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருவீர்கள்.

பொருள் வரவு நிலைக்கும். எவ்வித குறையும் இருக்காது. பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். நன்மையே செய்தாலும் தவறாகப் பேசும் நபர்களை நினைத்து மன வருத்தம் கொள்வீர்கள்.

சோதனைக்குரிய காலத்திலும் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு வரும் நீங்கள் மார்ச் மாதம் 22ம் தேதி முதல் எதிர்பார்க்கும் வெற்றியை அடைவீர்கள்.

ராசிநாதன் சுக்கிரனின் பெயர்ச்சி நிலை உங்கள் மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை மனதில் ஊற்றெடுக்கும். உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடத்தினை சந்திக்க நேரலாம். அவ்வப்போது உண்டாகும் முன்கோபத்தினால் ஒரு சிலருடன் மனஸ்தாபம் உண்டாகும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும்.

ஏப்ரல் 2வது வாரத்தில் திடீர் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் ஒரு சில செலவினங்கள் உருவாகும்.

உடல்நிலையில் அவ்வப்போது தோன்றும் சிறுசிறு பிரச்னைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் கவனித்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். ஒரு சில குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் மூலமாகத் தீர்வு காண்பீர்கள்.

முன்பின் பழக்கமில்லாத நபர்களுக்கு உதவி செய்வதால் ஒரு சில உபத்திரவங்களுக்கு ஆளாக நேரிடும். கலைத்துறையினர் தொழில் ரீதியாக போட்டியான சூழலை சந்திக்க நேரிடும்.

உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திப்பார்கள். இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கமின்றி தவிப்பீர்கள். சோதனைகளைத் தாண்டி சாதிக்கும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம் நாட்கள்: மார்ச் 27, 28, 29.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மாரியம்மன் ஆலயத்தை ஆறுமுறை வலம் வந்து வணங்க சோதனைகள் தீரும்.

மிதுனம்

ஜென்ம ராசியில் ராகுவின் அமர்வு நிலை ஒரு சில விஷயங்களில் நன்மையையும், சில நேரத்தில் சிரமத்தினையும் தந்து கொண்டிருக்கும்.

10ம் இடமாகிய ஜீவன ஸ்தானம் இந்த மாதத்தில் வலுப்பெற்று காணப்படுவதால் செய்யும் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள்.

வாழ்வியல் நிலையை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் உங்கள் செயல்பாடுகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு பணியிலும் உங்களுக்குரிய கௌரவத்தினை அடைவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், ஏதோ ஒரு வகையிலான பண வரவு செலவுகளை சமாளிக்க வைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலப்புகளுடன் மகிழ்ச்சி நிலவி வரும்.

முன்பின் தெரியாத நபருக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மையைத் தரும். வண்டி, வாகனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனளிக்கும். தாயார் வழி உறவினர்களால் ஆதாயம் காண்பீர்கள்.

பிள்ளைகளால் பெருமிதம் கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். உங்கள் சிந்தனைகள் மற்றவர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பினையும், மரியாதையையும் பெற்றுத் தரும்.

சிறுசிறு கடன்சுமைகளை தீர்க்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.

வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு உறுதுணையாய் இருந்து செயல்படுவீர்கள். கௌரவச் செலவுகள் அதிகரிக்கக் கூடும். மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொலைதூரப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் சந்தித்து வரும் கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.

உத்யோகஸ்தர்கள் அலுவலக நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் கடும் உழைப்பினை வெளிப்படுத்தி அதற்கான பயனையும் இந்த மாதத்திலேயே அடைவார்கள். உழைப்பினால் உயரவேண்டிய நேரம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 30, 31.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்யுங்கள்.

கடகம்

இந்த பங்குனி மாதத்தில் பிரச்னைகளைத் தரும் ஆறாம் இடம் வலுப்பெற்றாலும், மனவலிமையினால் எதையும் வெற்றி கொள்வீர்கள். பொறாமைக்காரர்களையும், போட்டியாளர்களையும் உங்களின் உண்மையான உழைப்பின் மூலம் ஓரங்கட்டி விடுவீர்கள்.

அயராத உழைப்பில் சுகம் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் பொருள் வரவு என்பது தடையில்லாமல் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நல்லது.

உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். பங்காளிகளுக்குள் இருந்து வரும் கருத்து வேறுபாடு நீங்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதில் செயலிழந்து போனாலும் இரவு நேரத்தில் உபயோகமாய் அமையும்.

நீங்கள் அறிந்திராத துறையில் புதிய முயற்சிகளை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது. உறவினர்களுடன் உரையாடுவதால் குடும்பத்தின் பாரம்பரியப் பெருமையை அறிந்து கொள்வீர்கள். வண்டி, வாகனங்களை இயக்கும்போதும், பிரயாணத்தின்போதும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளால் குடும்பத்தில் பிரச்னைகள் உருவாகலாம்.

அவர்களது விருப்பத்திற்காக சுற்றுலா செல்ல திட்டமிட நேரிடும். கேளிக்கை, கொண்டாட்டங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம்.

குடியிருக்கும் வீட்டினில் செய்ய நினைக்கும் ஆல்ட்ரேஷன் பணிகளை சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் மட்டுமல்லாது மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும்.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வினைக் காண்பர். தொழில்முறையில் உங்களது எண்ணங்களை நடைமுறைப்படுத்தி சோதித்துப் பார்க்க கால நேரம் சாதகமாக அமையும். கலைத்துறையினருக்கு செலவுகள் அதிகரிக்கும். சுயதொழில் செய்வோர் சிறப்பான லாபத்தினைக் கண்டு வருவார்கள். நன்மை தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 1, 2, 3.

பரிகாரம்: பௌர்ணமி நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

சிம்மம்

இந்த பங்குனி மாதத்தில் ராசிநாதன் சூரியன் எட்டாம் இடத்தில் அமர்வதால் சற்று சிரமமான சூழலை சந்திக்க நேரலாம். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருப்பதால் சற்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட பணிகள் அதன்படி நடைபெற இயலாத சூழல் தோன்றக்கூடும்.

இந்த நேரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் அதிகம் உணர்ச்சிவசப்படாது லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. வாக்கினில் நம்மையும் அறியாமல் வெளிப்படும் வார்த்தைகளுக்கு அடுத்தவர்களால் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கப்படும் என்பதால் கவனத்துடன் பேச வேண்டியது அவசியம்.

பொருளாதார ரீதியாக சற்று சிரமமான சூழல் நிலவி வரும். கையிருப்புகள் கரையத் தொடங்கும். அவசர செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகக்கூடும்.

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பிரச்னையைத் தரும் வகையில் அமையும். உடன்பிறந்தோரால் சங்கடங்கள் உருவாகக் கூடும். முன்பின் தெரியாத முற்றிலும் புதிய நபர்களை நம்பி எந்தச் செயலிலும் இறங்கக் கூடாது.

இந்த மாதத்தில் தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வழியில் எதிர்பார்த்திருந்த உதவி வந்து சேரும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதில் அநாவசிய குழப்பத்தினைத் தோற்றுவிக்கும். பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கு மிகுந்த சிரமப்படுவீர்கள்.

மூட்டு வலி மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகளால் உடல்நிலையில் சிறிது சிரமத்தினைக் காண நேரிடலாம். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். முடிந்தவரை அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உருவாகலாம். தொழில்ரீதியாக சிறப்பான உழைப்பினை வெளிப்படுத்தி நற்பெயரைக் கண்டாலும், எதிர்பார்த்த தன லாபம் அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் போட்டியான சூழலை சந்திக்க நேர்ந்தாலும், போட்டியாளரையும் தனது ஆதரவாளராக மாற்றிக்கொண்டு சாதிப்பர். சிரமங்களை எதிர்கொண்டு வெற்றி காணவேண்டிய நேரம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 4, 5.

பரிகாரம்: பங்குனி உத்திரம் நாளில் சிவாலயத்தில் அன்னதானம் செய்யுங்கள்.

கன்னி

ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி வரை ராசிநாதன் புதன் ஆறாம் இடத்தில் இருப்பதால் சற்று சிரமத்தினை எதிர்கொள்ள நேரிடலாம். எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணும் காரியங்கள் இழுபறியைத் தரும். மிகவும் நெருங்கிய நபர் ஒருவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுவதால் மன வருத்தம் கொள்வீர்கள்.

மனதில் தோன்றும் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்வதில் அவசரம் காட்டாது நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். நீங்கள் அவசரப்பட்டு செய்யும் செயல்களில் இழப்புகளோடு தேவையற்ற பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.

தனாதிபதியின் சாதகமான சஞ்சாரம் ஏதேனும் ஒரு வகையில் பொருள் வரவினை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும். நெடுநாளைய கடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.

புதிதாக கடன் வாங்குவதை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது. கடன் கொடுக்கல் வாங்கலில் நிச்சயமாக ஈடுபடக்கூடாது. அதேபோல யாரை நம்பியும் ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு நிலவி வரும்.

உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதத்தில் அநாவசிய பிரயாணங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். உஷ்ண உபாதையால் அவதிப்படும் வாய்ப்பு உண்டு என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை.

வீண் வாக்குவாதத்தால் வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நண்பர்களுடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதியைத் தரும்.

ஆடம்பர செலவுகள் அதிகரிக்கக் கூடும். குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலைக்கு வாங்கும் சூழல் தோன்றலாம்.உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சகபணியாளர்களின் பொறாமை உணர்வினால் தொல்லைகளை சந்திப்பார்கள்.

வியாபாரிகள் போட்டியினைத் தாண்டி தொழில் முறையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். கலைத்துறையினர் தங்கள் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் வெற்றி காண்பர். நற்பலன்களைக் காணும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 6, 7.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் லக்ஷ்மிநரசிம்மரை வழிபட்டு வாருங்கள்.

துலாம்

ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. மனதில் விதவிதமான ஆசைகள் தோன்றினாலும், நல்லது கெட்டது அறிந்து செயல்படுவீர்கள்.

சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கிரஹங்களின் நிலை வாழ்வியல் தரத்தினை வலுப்படுத்தும். பல்வேறு வழிகளில் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றினாலும் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

பிரச்னைக்குரிய விஷயங்களில் உங்களின் புத்தி சாதுர்யத்தோடு திறமையான வாக்கு சாதுர்யமும் இணைவதால் வெற்றி காண்பீர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் சாமர்த்தியமாக அணுகி சாதகமாக்கிக் கொள்வீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்பட்டு வருவார்கள். உங்கள் பணிகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கிய இடத்தினை வகிக்கும். புதிய வண்டி, வாகனங்கள் சேரும் வாய்ப்பு உள்ளது.

நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்யப்போய் சங்கடத்தினை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீடு, மனை, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். வீண் விவாதம் காரணமாக தம்பதியருக்குள் மனஸ்தாபம் தோன்றி மறையும்.

நண்பர்களோடு இணைந்து செயல்படும் விவகாரங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றி உண்டாகும். வீண் விரயத்தினைத் தவிர்த்து செலவினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டு வருவீர்கள். பூர்வீக சொத்துக்கள் தக்க நேரத்தில் உதவிகரமாய் அமையும்.

தொழில்முறையில் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற ஏக்கம் மனதில் நிலவி வந்தாலும் உங்களின் சிறப்பான செயல்பாடுகள் தனித்துவத்தை வெளிப்படுத்தும். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த விருதும் பாராட்டும் வந்து சேரும். சாதகமான பலன்களை சந்திக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 8, 9, 10.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் சுதர்ஸனப்பெருமாளை வணங்கி வாருங்கள்.

விருச்சிகம்

ராசிநாதன் செவ்வாயின் சாதகமான அமர்வினால் இந்தப் பங்குனி மாதத்தில் எண்ணிய காரியங்களை ஏதேனும் ஒரு வழியில் நடத்தி முடிப்பீர்கள்.

சிந்தனையில் வெளிப்படும் கருத்துக்கள் உண்மையை உணர்த்துவதால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். மனதில் தோன்றுவதை மிகவும் பக்குவமாகப் பேசி அடுத்தவர்களுக்கு புரிய வைத்து வெற்றி காண்பீர்கள். தன ஸ்தானாதிபதி குருவின் அதிசார ஆட்சி பலம் உங்கள் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும். எதிர்காலம் சார்ந்த திட்டங்களை மனதிற்குள் வகுத்து வருவீர்கள்.

தனாதிபதியோடு சனி மற்றும் கேதுவின் இணைவு பொருளாதார ரீதியான சிறிது சிரமத்தினைத் தந்தாலும் செலவினை எதிர்கொள்ளும் வகையில் பொருள்வரவு இருந்து வரும்.

வார்த்தைகளில் ஒரு சில நேரத்தில் நம்மையும் அறியாமல் கடுமை வெளிப்படலாம். ஆயினும் அதனால் உண்டாகும் பிரச்னைகளை சமாளிக்கும் கலையை அறிந்திருப்பீர்கள்.

உடன்பிறந்தோரை ஒரு சில விஷயங்களுக்கு சார்ந்திருக்க வேண்டி வரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் மிகுந்த பயனைத் தரும். தொலைதூரப் பிரயாணங்கள் அனுகூலமாக அமையும். உறவினர்கள் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். பிள்ளைகளின் சாதனைகளைப் பற்றி பேசுவதில் பெருமிதம் கொள்வீர்கள். மாதத்தின் பிற்பாதியில் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டிய வாய்ப்பு உள்ளதால் சம்பந்தமில்லாமல் அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை உங்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவார்.

தொழில் முறையில் கடும் போட்டியினை சந்திக்க நேர்ந்தாலும், அதிக சிரத்தையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் தங்கள் திறமையை நிரூபித்து பரிசும் பாராட்டும் பெறுவர். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சிகளை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது. சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 15, ஏப்ரல் 11, 12.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

தனுசு

அதிசாரத்தில் இருக்கும் ராசிநாதன் குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்திருந்தாலும் அதிக மாற்றத்தினைத் தரமாட்டார். குரு ஆட்சி பலம் பெற்றிருந்தாலும் உங்கள் பணிகள் நிறைவேற அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

எந்த ஒரு விஷயத்திலும் தனித்து செயல்பட இயலாத சூழல் தோன்றலாம். மிகவும் நம்பியிருந்த நபர் ஒருவர் முக்கியமான நேரத்தில் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுவதால் சற்று மன வருத்தம் தோன்றக்கூடும். சுக்கிரன் பலத்துடன் இருப்பதால் பொருள் வரவிற்கு பெரிய குறை ஏதும் உண்டாகாது. குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவீர்கள். உடன்பிறந்தோரால் கூடுதலான செலவுகளை சந்திக்க நேரிடலாம்.

தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சிரமத்தினைத் தரலாம். முன்பின் தெரியாத மனிதர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.

குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும். தாயார் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி மனதிற்கு நிம்மதியைத் தருவார்கள். நரம்பியல் சார்ந்த தொந்தரவுகளால் உடல்நிலையில் சிரமம் காண நேரிடும்.

வாழ்க்கைத்துணையின் நீண்ட நாள் விருப்பம் ஒன்றினை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களோடு திடீர் விரோதம் தோன்றுவதற்கான சாத்தியம் உண்டு. கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் உண்டு.

தொழில்முறையில் மார்ச் மாதத்தின் இறுதியில் போட்டியான சூழலை சந்தித்தாலும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து ஏறுமுகத்தினைக் காண்பீர்கள். வாக்குசாதுர்யத்தால் சாதித்து வந்த கலைத்துறையினர் இந்த மாதத்தில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாக அவ்வப்போது உணர்ந்து வருவீர்கள். சரிசம பலனைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 16, 17, 18, ஏப்ரல் 13.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் சாய்பாபா ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள்.

மகரம்

இந்த மாதத்திய கிரஹ நிலை உங்களுக்கு சற்று சிரமத்தினைத் தரும் வகையில் அமைந்துள்ளது. வாக்கு ஸ்தானம் வலுவுடன் இருப்பதால் எண்ணிய காரியங்களை பேச்சுத் திறமையால் சிறப்பாக நடத்தி முடித்து நற்பெயர் கண்டு வருவீர்கள்.

பொருள் வரவு நன்றாக இருந்தாலும் திட்டமிட்ட பணிகளை முடிப்பதற்குள் அதிக அலைச்சலைக் காண்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக அணுகாமல் தீவிரமாக ஆராய்ந்து செயல்படும்போது காரியதாமதம் உண்டாகும். இதுநாள் வரை தடைபட்டிருந்த தனலாபமானது மெதுவாக வரத்துவங்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மிகுந்த சிரத்தை கொள்வீர்கள்.

பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் உங்களின் பொறுப்பான பணிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும்.

உடன் பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமான பணிகளுக்கு அடுத்தவர்களை நம்பாது நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டிய சூழல் உருவாகலாம். உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

பிள்ளைகளின் வாழ்வியல் தரத்தினை உயர்த்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவீர்கள். உங்கள் பணிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக செயல்பட்டு வருவார்.

குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அடுத்தவர்களின் பணிகளுக்காக, ஒரே நேரத்தில் பலவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்யோக ரீதியாக அலுவலகத்தில் சம்பாத்யம் உயர்ந்தாலும் பணிச்சுமை இரு மடங்காக அதிகரிக்கும்.

வியாபாரிகள் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் பேச்சின் மூலம் சாதிப்பர். இரவு நேரத்தில் கனவுத்தொல்லையால் நிம்மதியான உறக்கமின்றி தவிப்பீர்கள். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 19, 20.

பரிகாரம்: பிரதோஷ தினத்தன்று சிவாலயத்தில் உங்களால் இயன்ற கைங்கரியத்தைச் செய்யவும்.

கும்பம்

இந்த பங்குனி மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. கௌரவமும், வருமானமும் ஒருசேர உயரக் காண்பீர்கள். பிரச்னைக்குரிய நேரத்தில் உங்களின் விவேகமும், நிதானமும் நிறைந்த செயல்பாடு கௌரவத்தை உயர்த்தும்.

வெளியில் விட்டுக் கொடுத்துச் செல்வது போல் தோன்றினாலும் உங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அடுத்தவர்களின் எண்ண ஓட்டத்தைப் பற்றிக் கவலை கொள்ளாது தனக்கு சரியெனத் தோன்றுவதை பேசி வருவதால் ஒரு சிலரிடம் கருத்து வேறுபாடு கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இடம்பிடிக்கும்.

பொருளாதார ரீதியாக சந்தித்து வந்த சிரமங்கள் குறையும். அதே நேரத்தில் புதிதாக கடன் வாங்குவதை சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பது நல்லது. உடன்பிறந்தோர் முக்கியமான நேரத்தில் துணை நிற்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் அமையும்.

பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மார்ச் மாதத்தின் இறுதியில் எதிர்பாராத பிரயாணத்தினை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் உங்களது எதிர்பார்ப்பினை நிறைவேற்றவில்லையே என்ற ஏக்கம் மனதின் மூலையில் இருந்து வரும். ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.

வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய்த் துணை நிற்பார். அநாவசிய செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் தொழில்முறையில் புதிய திருப்பத்திற்கான அறிகுறிகளைக் காணத் துவங்குவார்கள்.

கலைத்துறையினர் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருவார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் அதிகாரத்தை நிரூபித்து சாதிப்பர். கடந்த சில மாதங்களை விட இந்த மாதம் முன்னேற்றம் தரும் வகையில் அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 21, 22.

பரிகாரம்: ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு வாருங்கள்.

மீனம்

ராசிநாதன் குரு பகவானின் ஆட்சி பலம் இந்த மாதத்தில் அமையவிருப்பதால் சாதகமான பலன்களை சந்திக்க உள்ளீர்கள். அதிசாரம் பெற்ற குருபகவான் பத்தாம் வீட்டு கேதுவின் தாக்கத்தினைக் குறைப்பார். புதன் ஒருவரைத் தவிர இன்ன பிற கிரஹங்கள் சாதகமான நிலையில் சஞ்சரித்து வருகின்றனர்.

மாதத்தின் பிற்பாதியில் பொதுக்காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் தனிப்பட்ட முறையில் உங்களின் கௌரவம் உயர்வடையும். சுக்கிரன் மார்ச் 22 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் பொருள் வரவிற்குக் குறைவிருக்காது. அதே நேரத்தில் செலவுகள் கூடுவதால் சேமிப்புகள் கரையும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில் முறையில் மிகுந்த உதவியாக இருக்கும். நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை பேச்சினில் வெளிப்படுத்தாது எழுத்தின் மூலம் வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். மார்ச் மாதத்தின் இறுதிக்குள் அடிக்கடி பிரயாணம் செய்ய நேரிடலாம்.

வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும். தகப்பனார் வழி உறவினர்களின் துணையோடு குடும்பப் பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்களை பெருமிதம் கொள்ளச் செய்யும்.

அவர்களது வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு உருவாகும். முன்பின் தெரியாத பெண்களுக்கு உதவி செய்யப்போய் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்பு உண்டு.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கீழ்நிலைப் பணியாளர்களின் வழியில் ஒரு சில இடைஞ்சல்களை சந்திப்பார்கள். தொழில்முறையில் கலைத்துறையினரின் செயல்பாடுகள் வேகமெடுக்கும். கனவுத் தொல்லையால் நிம்மதியான உறக்கம் கெடலாம். மற்றபடி நற்பலன்களைத் தரும் மாதமே.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 23, 24.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers