2019 ஆம் ஆண்டு மீனம் ராசியினரே உங்களுக்கு அதிர்ஷ்டமா?

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

மீனம் ராசியினரே! கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் தெரிந்திருந்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள்.

மறப்போம் மன்னிப்போம் என்றிருக்கும் நீங்கள், சண்டைக்காரர்களைக் கூட சந்தோஷப்படுத்துவதில் வல்லவர்கள். உங்களுக்கு 8வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். செவ்வாய் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இனி வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள்.

உப்பு விற்கப் போய் மழை வந்த கதையாய் எதை தொடங்கினாலும் இழப்புகளும், ஏமாற்றங்களும் தானே ஏற்பட்டது இனி அந்த நிலை மாறும் அரைக்குறையாக நின்று போன வேலைகளெல்லாம் முழுமையடையும். மனக்கலக்கத்துடன் சோர்ந்து கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4ம் வீட்டிலும், கேது 10லும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்துச் செல்லும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

இந்தஆண்டு முழுக்க சனிபகவான் 10ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துச் செல்லும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். புது வேலை கிடைக்கும். புது பதவிகளும், சிறப்பு பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நீடிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு 10ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள்.

சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள்.

கன்னிப்பெண்களே!

நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். தாமதமான கல்யாணம் வருடத்தின் பிற்பகுதியில் நல்ல விதத்தில் முடியும். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். மாதவிடாய்க் கோளாறு, தலைச்சுத்தல், தூக்கமின்மை நீங்கும். புதிய நண்பர்களை நம்பி ஏமாற வேண்டாம். வேலை கிடைக்கும்.

மாணவர்களே!

விளையாட்டுத்தனத்தை ஓரங்கட்டிவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே!

ஆதாரமில்லாமல் யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். சகாக்கள் சிலர் உங்களை புகழ்வதை போல இகழ்வார்கள்.

வியாபாரிகளே!

பெரிய அளவில் முதலீடுகள் செய்து திணறாமல் அளவாக பணம் போடுங்கள். சந்தை நிலவரம் அறிந்து புது கொள்முதல் செய்யுங்கள். புதிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். கடையை விரிவுப்படுத்தி அழகுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும்.

வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று உங்களை டென்ஷனாக்குவதுடன், விவாதமும் செய்வார்கள். மருந்து, எண்டர்பிரைசஸ், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கருத்துவேறுபாட்டால் பிரிவார்கள். புதிய பங்குதாரர்கள் வருவார்கள்.

உத்யோகஸ்தர்களே!

கிடைக்க வேண்டிய பதவியுயர்வு ஏதோ காரணங்களால் தடைபட்டுப் போனதே! இனி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அலுவலகப் பிரச்னைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்த பிரச்னைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். புது வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கணினி துறையினர்களே! அன்னிய நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வாய்ப்பு கிட்டும்.

கலைஞர்களே!

கிடைக்கின்ற வாய்ப்பு எதுவானாலும் ஏற்றுக் கொள்ளப் பாருங்கள்.

விவசாயிகளே!

எரு கலைக்கும் போது தேள் கடிக்க வாய்ப்பிருக்கிறது. பயிரை பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற நவீனரக பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துங்கள். இந்த புத்தாண்டு தொடக்கத்தில் சின்னச் சின்ன தொந்தரவுகளை தந்தாலும் அவ்வப் போது எதிர்பாராத பணவரவு, வெற்றிகளை தரக்கூடியதாக அமையும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்