2019 பலன்கள்: கும்பம் ராசியினரே வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

கும்பம் ராசியினரே! எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள்.

அமைச்சராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தவறை தட்டிக் கேட்பவர்களே! உங்கள் 9வது ராசியில் சந்திரனும், சுக்கிரனும் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள்.

முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இபோது உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

எதிர்பார்த்த பணம் வரும். செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போது 2ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள்.

சகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள்.

சில நாட்கள் தூக்கம் குறையும். ஆனால் ராகுவும் 6ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும்.

ஆனால் ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 11ம் வீடான லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

வருமானம் உயரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வீடு வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

அரசால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.

மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு 11ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.

புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கன்னிப்பெண்களே!

விரக்தி, ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை அமையும். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு நினைத்தவரையே கல்யாணம் முடிப்பீர்கள்.

மாணவர்களே!

பல பாடங்களில் சிவப்பு கோடிடும் அளவிற்கு மதிப்பெண் குறைந்ததே! இனி சக மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெறவேண்டுமென்ற வைராக்கியத்துடன் படிப்பீர்கள். வெற்றி நிச்சயம். ஆசிரியர் பாராட்டுவார்கள்.

அரசியவாதிகளே!

உங்களைப் பற்றிய வதந்திகள் நீங்கும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரிகளே!

மாவு விற்கப்போனால் காற்று வந்ததுபோல, தொட்டதெல்லாம் நட்டமானதே! இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள்.

வேலையாட்களை நம்பி தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுத்தீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதிஇறக்குமதி, நீசப்பொருட்களால் ஆதாயமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே!

உங்களைக் குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களே! இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்தீர்களே! இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.

கலைஞர்களே!

பட்டிதொட்டியெங்கும் உங்கள் படைப்புகள் பாராட்டு பெறும்.

விவசாயிகளே!

வாய்க்கால், வரப்புச் சண்டையெல்லாம் ஓயும். உங்கள் வருமானத்தை உயர்ந்தும்படி மாற்றுபயிர் செய்வீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். சின்ன சின்ன சிக்கல்கள், சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளை படைக்கத் தூண்டும் வருடமிது

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்