2019 புத்தாண்டு பலன்கள்: இந்த வருடம் முழுக்க சனி 2ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச்சனியாக இருப்பார்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

விருச்சிக ராசியினரே! ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள்.

மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவர்கள்.சுக்கிரன் 12ல் மறைந்திருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் மற்றும் திடீர் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள்.

திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனால் உங்களுக்கு 12வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், திடீர் பயணங்களும், அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும்.

செவ்வாய் 5ம் வீட்டிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுவது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. வரம்பு மீறி யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

உடன் பிறந்தவர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சகோதரியின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்த வரை பேசித்தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் கேது நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்.

ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மதத்தை சேர்ந்தவர்களால் உதவிகள் உண்டு. ராசிக்கு 9ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் மனத்தாங்கல் வந்து செல்லும்.

தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வரும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலும், ராகு 8ம் வீட்டிலும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி வந்து விலகும். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைக்கூர்ந்து பேசாதீர்கள். அதன் மூலமாக பிரச்னைகள் வரக்கூடும். காலில் அடிபடும். இந்த வருடம் முழுக்க சனி 2ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனியாக இருப்பார் பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது.

உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. பணப்பற்றாக்குறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும்.

மஞ்சள் காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். வாழ்க்கையின் மீது வெறுப்புணர்வு வந்து செல்லும்.

ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசியை விட்டுவிலகி 2ம் வீட்டில் தொடர்வதால் பணவரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளை பாக்யம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள்.

கன்னிப்பெண்களே!

காதல் விவகாரத்தால் உயர்கல்வியில் மதிப்பெண்களை இழந்தீர்களே! இனி போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். வேலை கிடைக்கும். கண்ணுக்கழகான கணவர் வந்தமைவார். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வெளிநாடும் செல்வீர்கள்.

மாணவர்களே!

பள்ளியில் அரட்டையும், வீட்டில் விடிந்தும் குரட்டையும் என நேரத்தை வீணடித்தீர்களே! இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். விளையாட்டிலும் பதக்கம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே!

வெறும் அறிக்கை மட்டும் போதாது, தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். எதிர்கட்சிக்காரர்களின் விமர்சங்களைக் கண்டுகொள்ளாதீர்கள்.

வியாபாரிகளே!

பக்கத்து கடைக்காரருடன் தகராறு, சரக்குகள் தேங்கியதால் நட்டம் என தொடர் சிக்கல்களை சந்தித்தீர்களே! அந்த நிலை மாறும். பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். டெக்ஸ்டைல், மருந்து, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கொட்டம் அடங்கும். உங்களின் ஆலோசனைக்கு தலையசைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும்.

உத்யோகஸ்தர்களே!

வீண் பழியால் மன உளைச்சலுக்குள்ளாகி தூக்கமிழந்தீர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்த்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே! இனி அந்த அவலநிலை மாறும். நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும்.

கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். உங்களின் தனித்திறமையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினர்களே!

வருமென எதிர்பார்த்த வாய்ப்புகள் கூட நூலிழையில் தவறியதே! இனி பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் வளரும்.

விவசாயிகளே!

வண்டுக்கடி, பூச்சுக் கடியிலிருந்து பயிரை காப்பாற்றுவீர்கள். விளைச்சல் ரெட்டிப்பாகும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். இந்த 2019ம் ஆண்டு முணுமுணுத்துக் கொண்டிருந்த உங்களை முடிசூட்டி வைப்பதாக அமையும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers