2019 புத்தாண்டு பலன்கள்: வெளிநாட்டில் இருப்பவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

துலாம் ராசியினரே! பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் நேசிப்பீர்கள்.

உடுத்தும் உடையையும், உள்ளிருக்கும் மனசையும் வெள்ளையாக வைத்துக் கொள்ளும் நீங்கள் யாருக்கும் தீங்கு நினைக்கமாட்டீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போது இந்த 2019ம் ஆண்டு பிறப்பதால் குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.

குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

தோலில் நமைச்சல் நீங்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். புத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும்.

பிரபலங்களால் சில வேலைகள் முடிவுக்கு வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். வெளிநாடு சென்று வருவீர்கள். இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள்.

உங்களிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். தாய்மாமன், அத்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். என்றாலும் உங்கள் ராசியிலேயே இந்த புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கும். 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

ஆனால் 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள்.

ஆனால் ராகு 9ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும்.

வேற்றுமொழிப் பேசுபவர்கள், வேற்று மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 3ம் வீட்டிலேயே நிற்பதால் திடீர் யோகம் உண்டு. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

புதுத் தொழில் தொடங்குவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அக்கம்பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும்.

ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 3ம் வீட்டிலேயே அமர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

கன்னிப் பெண்களே!

முடிவெடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி சுயமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். வேலை கிடைக்கும். தோலில் நமைச்சல், தேமல் நீங்கும். தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும்.

மாணவர்களே!

ஏனோ தானோ என்று படிக்காமல் அதிக நேரம் ஒதுக்கி படியுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். வகுப்பறையில் அரட்டைப் பேச்சு வேண்டாம். நண்பர்களுடன் மோதல்கள் வந்து போகும். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

அரசியல்வாதிகளே!

தலைமையுடன் நெருக்கமாக இருந்தாலும் அவரின் சொந்த விஷயங்களில் தலையிடாமலிப்பது நல்லது. சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரிகளே!

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த பிட் நோட்டிஸ், வானொலி விளம்பரம் என செலவிடுவீர்கள். பக்கத்து கடைக்காரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.

அரசு கெடுபிடிகள் தளரும். பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து பழைய நிலைக்கு திரும்புவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். தொல்லை கொடுத்த வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.

உத்யோகஸ்தர்களே!

இழுபறியாக இருந்த பதவிஉயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சிலநேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள்.

வேறு சில வாய்ப்புகளும் வரும். மறுக்கப்பட்ட உரிமைகளை பெற சிலர் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். கணினித்துறையினர்களே! அயல்நாட்டு தொடர்புடைய புதிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். சலுகைகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினர்களே!

வீண் வதந்திகளால் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி உற்சாகமாகி தடைபட்ட வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்து பேசும்.

விவசாயிகளே!

பயிரை பாதுகாக்க பலவகை மருந்துகளைப் போட்டும் பயனில்லாமல் போனதே! இனி அந்த நிலை மாறி மகசூல் பெருகும். மாற்றுப் பயிரால் லாபமும் வரும். சமயோஜித புத்தியாலும், விட்டுக் கொடுக்கும் மனதாலும் சாதிக்கும் வருடமிது.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers