குருபெயர்ச்சி 2018-19: மேஷம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

மேஷம் ராசியினரே

பிரச்னைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் த்தயங்குவீர்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பவர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களை சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்த உங்கள் பாக்யாதிபதியாகிய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும். பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும்.

மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். வேலைச்சுமையால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லைகளும் அவ்வப்போது வந்து நீங்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்ல தல்ல.

ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்ஸ்யூரன்ஸை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

குருபகவானின் பார்வை பலன்கள்

குருபகவான் 2ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும்.

சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தி தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் பாக்யவிரயாதிபதியான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும்.

தந்தையார் ஆதரவாக இருப்பார். அவர்வழி உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். புது வேலை கிடைக்கும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் ஜீவனாதிபதியும்லாபாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள், குடும்பத்தில் சலசலப்பு, உத்யோகத்தில் எதிர்ப்புகள் வந்து செல்லும்.

வேற்றுமதத்தைச் சேர்ந்த நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரங்கள் உதவுவார்கள்.

20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உள்ள காலகட்டங்களில் உங்களின் சேவகாதிபதியும்சஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், உங்களைப் பற்றிய வதந்திகள், பழைய கடனை நினைத்து அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல்கள் வந்து செல்லும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 9ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயம் உடனே முடியும். தந்தையார் உறுதுணையாக இருப்பார். அவரின் உடல் நிலையும் சீராகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும்.

குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டு. மனைவிவழியில் இருந்த மோதல்கள் விலகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்து விடாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு நட்டங்கள் வந்துப் போகும். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள்.

வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்து கொள்வார்கள். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ரசாயன வகைகள் மற்றும் ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும்.

உத்யோகத்தில் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களின் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது.

உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களின் வேலைகளை சேர்த்துப் பார்ப்பீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் வரும்.

கன்னிப் பெண்களே!

சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாகக் கையாளுங்கள். சிலர் உங்களுக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. பள்ளி கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள்.

மாணவ மாணவிகளே!

கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும் போது காலில் அடிபடக்கூடும். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களை சிக்க வைப்பார்கள்.

கலைத்துறையினரே!

போராடி சின்னச் சின்ன வாய்ப்புகளைப் பெற வேண்டி வரும். மூத்த கலைஞர்களை அரவணைத்துப் போங்கள்.

அரசியல்வாதிகளே!

உட்கட்சிப் பூசல்கள் வெடிக்கும். எதிர்க்கட்சியினரை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத் தெடுப்பீர்கள். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம். தொகுதி மக்களை மறக்காதீர்கள். சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

விவசாயிகளே!

தக்காளி, வெண்டை, பீன்ஸ், எள் வகைகளால் லாபம் உண்டு. கிணறை மேலும் ஆழப்படுத்துவீர்கள். நீர் சுரக்கும். இந்த குரு மாற்றம் கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.

பரிகாரம்

வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடலாம். சித்தர்கள் சமாதிக்கு சென்று தியானம் செய்வதன் மூலம் மனக்கலக்கம் தீரும்.

ஏழை, எளியவர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகளை தானமாக எடுத்து கொடுக்கலாம். அன்னதானம் செய்வது நல்லது. தென்திட்டை குருபகவானை சென்று தரிசனம் செய்து வரலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்