சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்- அஸ்வினி முதல் ஆயில்யம் வரை

Report Print Fathima Fathima in ஜோதிடம்

அசுவினி

19.12.2017 முதல் 28.03.2020 வரை

வைராக்கிய குணத்தால் அனைத்து விஷயங்களையும் சாதித்துக் கொள்ளும் அஸ்வினி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில், கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வு வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

சனி சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.

குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். கணவன்மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நன்மை பெறுவீர்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள், எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு பொருளாதாரம் உயரும், கடன்கள் குறையும். வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

அரசியல்துறையினருக்கு பொருளாதார நிலை மேம்படும். மேலிடத்துடன் ஒற்றுமை பலப்படும். மாணவர்கள் நன்கு படித்து பிறர் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். தைரியம் அதிகரிக்கும். முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை.

பரிகாரம்:

தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7.

பரணி

19.12.2017 முதல் 28.03.2020 வரை

அறிவார்ந்து செயல்படும் பரணி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும்.

சனியின் சஞ்சாரத்தால் வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.

குடும்பத்தாருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது, கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தி தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். பிறருடைய பிரச்னை தீர பாடுபடுவீர்கள். காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாக்கு கொடுக்கும் முன் யோசித்து கொடுக்கவும்.

பரிகாரம்:

குலதெய்வத்தை வணங்கி வர பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

கார்த்திகை

19.12.2017 முதல் 28.03.2020 வரை

வேகமான நடவடிக்கைகளால் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

குடும்பத்தார் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்கள் எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். கலைத்துறையினர் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்குக் கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாகப் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி. பணவரவில் அதிருப்தி

பரிகாரம்:

அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர, காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9.

ரோகிணி

19.12.2017 முதல் 28.03.2020 வரை

வசீகரமான பேச்சால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடுவது நன்மை தரும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும்.

மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. பெண்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள், வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் கருத்து வேற்றுமை.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மியை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

மிருகசீரிடம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

எந்த வேலையையும், வேகமான நடவடிக்கைகளால் சரியான நேரத்தில் செய்யும் மிருகசீர்ஷ நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி, தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்கக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

குடும்பத்தாரால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் குறையும்.

மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகம், வியாபாரம் சிறப்பாக இருக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க திட்டமிடுதல் அவசியம்.

பரிகாரம்:

கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கிவர, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

திருவாதிரை

19.12.2017 முதல் 28.03.2020 வரை

சாமர்த்தியமும், நுணுக்கமும் நிறைந்த திருவாதிரை நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத்தரும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தாரால் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவி இருவரும் கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் பேசும்போது கவனம் தேவை.

பரிகாரம்:

ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9.

புனர்பூசம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

எந்தக் கடினமான சூழ்நிலையையும் நிதானமாகவும், நிறைவுடனும் அணுகும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை இருக்கும். காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும்.

உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு உடனே விலகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம்.

கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் வெளிவட்டார பழக்க வழக்கங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. மாணவர்கள் கவனத்தைச் சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களின் செயல்களால் டென்ஷன் ஏற்படலாம்

பரிகாரம்:

ஸ்ரீராமருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

பூசம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

கடினமான வேலைகளையும் புன்சிரிப்போடு செய்யும் திறன் படைத்த பூச நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் நட்சத்திராதிபதி சனியின் சஞ்சாரத்தால் மனக்கலக்கம் நீங்கும். எவ்வளவு திறமையாகச் செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியிருந்த நிலை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவுகளால் உடல் நல பாதிப்பு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண, கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தார் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.

உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்றுவிடுவது நல்லது. அரசியல்வாதிகள் கடின உழைப்புக்குபின் முன்னேற்றம் அடைவார்கள். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம்.

பரிகாரம்:

முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க, மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7.

ஆயில்யம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

கொண்ட நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் ஆறாமிட சனியின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்தபடி காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். ஆனாலும் பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். பெரியோர் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய பதவிகள், கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக நிலவிவந்த குடும்பம் சார்ந்த பிரச்னைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள். பணவரத்து நன்றாக இருக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படலாம்.

பரிகாரம்:

விநாயகப் பெருமானை அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க, காரியத் தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்