குரங்குகளின் காவலனாக மாறிய முதியவர்

Report Print Kabilan in ஆசியா

சீனாவில் அரிய வகை குரங்குகளை பாதுகாத்து வந்ததால் Dobrgyal என்பவர் ‘குரங்குகளின் தந்தை’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

சீனாவைச் சேர்ந்தவர் Dobrgyal(69). வனக் காப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற இவர், தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து திபெத் தன்னாட்சி பகுதியில் வசித்து வரும் அரிய வகை மக்காக் குரங்குகளுக்கு உணவுகளை அளித்து வருகிறார்.

18 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 50 குரங்குகளே இருந்தன. ஆனால், Dobrgyal குரங்குகளுக்கு ஆதரவளித்து உணவுப்பொருட்களை அளித்து வந்ததால், தற்போது இந்த குரங்குகளின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக Dobrgyal ‘குரங்குகளின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். இவர் உணவுகளை மூட்டைகளில் கொண்டு வரும்போது, குரங்குகள் ஓடி வந்து இவர் மீது ஏறி விளையாடுகின்றன.

உடல்நலம் சரியில்லாத குரங்குகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் Dobrgyal, சில நாட்கள் அவற்றுக்கு மருத்துவம் பார்த்து பின்பு கொண்டு வந்து விடுகிறார்.

சீன அரசு இந்த வகை குரங்குகளை அரிய விலங்கினமாக அறிவித்து, பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும், இவர் தனிப்பட்ட ஆர்வத்தில் சொந்த செலவில் உணவுகளை வழங்கி வருகிறார்.

தற்போது குரங்குகள் வசிக்கும் இந்த பகுதியை நோக்கி சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக Dobrgyal கூறுகையில், ‘எனக்கு வயதாகிவிட்டது. நான் இருக்கும் காலம் வரை குரங்குகளுக்கு உணவூட்டுவேன். அதற்குப் பிறகு என் மகன்கள் இந்தப் பணியைத் தொடருவார்கள் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்