தீயால் வசீகரித்து பிடிக்கப்படும் மீன்கள்! இப்படியான பாரம்பரிய முறை உங்களுக்கு தெரியுமா?

Report Print Maru Maru in ஆசியா
527Shares

தைவான் மீனவர்கள் தீப்பந்தங்களால் மீன்களை வசீகரித்து, வலைகளில் தானே வந்து விழவைத்து, எளிதாக குவியல் குவியலாக பிடிக்கின்றனர்.

இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக மத்தி மீன்களை(Sardines) இப்படி பிடிப்பது தைவான் மீனவர்களின் பாரம்பரிய முறையாக விளங்குகிறது. ஆனால், எல்லா வகை மீன்களையும் அவர்கள் இப்படி பிடிப்பதில்லை பிடிக்கவும் முடியாது.

பறவைகள் பலவிதம் போல, கடவுள் படைப்பில் மீன்களும் பலவிதமாகத்தானே இருக்கும். பூச்சி இனங்களில் விட்டில் பூச்சிகள் தீயால் வசீகரிக்கப்படுவது போல, மீன் இனங்களில் மத்தியும் தீயால் வசீகரிக்கப்படுகிறது.

கவர்ச்சியான கந்தக ஒளி

இந்த சூட்சுமம் மீனவர்களுக்கு தெரிந்தால் போதாதா, மீன்களை பிடிக்க அதற்கேற்ற தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொண்டனர்.

நீண்ட மூங்கிலால் ஆன தீப்பந்தங்களில் வசீகரமான ஒளிக்காக கந்தக மண்ணையும் ஒருமுனையில் பயன்படுத்துகின்றனர். இது நீரில் கரையக்கூடிய கந்தக வாயுவை உருவாக்கி, ஜுவாலையை வசீகர நிறஒளியுடன் பிரகாசப்படுத்துகிறது.

படகுகளின் தலைப்பகுதியில், நீருக்குள் இருக்கும் மீன்களுக்கும் அதன் ஒளி படுமாறு உயர்த்திக் காட்டுகின்றனர்.

செவ்வலாக சேர்ந்து செல்லும் மீன்கள் தீப்பந்தத்தை கண்டதும் அதை நோக்கி மகிழ்ச்சியோடு கண்மூடித்தனமாக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் குதிக்கின்றன. மீனவர்களின் வலைகளிலும் படகுக்குள்ளும் திட்டமிட்டபடி மாட்டிக்கொள்கின்றன.

அவைகளின் மகிழ்ச்சி நீடிப்பதில்லை மீண்டும் நீருக்கு மீளமுடியாமல் துடிக்கின்றன. மீன்களுக்கு மரணம் மீனவர்களுக்கு இரணம் என்ற தொழில் தர்மம் இப்படி தொடர்கின்றன.

நல்ல வருமானம்

கந்தக ஜுவாலையில் மீன்பிடிக்கும் முறை இங்கு ஜப்பானியர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டு வெகுசிறப்பாக நடந்தது. மத்திவகை மீன்கள் மட்டுமே பிடிக்கப்பயன்படுவதால் இப்போது குறைந்துவிட்டது. ஜின்சேன் கந்தக துறைமுகத்தில் மட்டும் இந்த முறை இன்னும் தொடர்வது ஆச்சரியப்படத்தக்கது.

இந்த மீன்பிடி முறைக்காக 300 படகுகள் அங்கு இருந்தன. ஆனால், வடக்கு தைவானின் ஜின்சேன் மாவட்ட உள்ளூர் மீனவர் சங்கங்களின் விருப்பப்படி 3 படகாக குறைக்கப்பட்டுள்ளது.

நல்ல வானிலையின் கீழ் ஒரு இரவில் 6 மணிநேரம் இந்த முறையில் 3 லிருந்து 4 டன் வரையில் மத்தி மீன்களை பிடிக்கின்றனர். இதனால், ஒரு மீனவர்கள் குழுவுக்கு மட்டும் 4,500 டாலர் வருமானம் கிடைக்கிறது.

இந்த தொழில்முறை சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதால் அரசும் மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. ஆதனால், இந்த பாரம்பரிய முறை நின்றுபோக வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

எதிர்காலம் குறைவு

அதே சமயம், இந்த தொழில் மத்தி மீனை மட்டுமே குறிவைத்து நடத்துவதால் வருடத்தில் பருவமான மூன்று மாதங்கள்( மே முதல் ஜூலை வரை ) மட்டுமே நடக்கிறது.

இந்த தொழிலில் இளைஞர்களிடமும் அவ்வளவாக ஆர்வம் தொற்றவில்லை. இப்போது ஈடுபடுபவர்களின் சராசரி வயதே 60 ஆக இருப்பதால் இதற்கு எதிர்காலம் பிரகாசமாக இல்லை.

மத ஆய்வாளர் கருத்து

ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுப் பேராசிரியர் ஜெங் ஸி மிங் கூறுகையில், ’தைவானின் வடகிழக்குப் பகுதியில் கந்தக வாயு பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழில்நுட்பம் 2 அல்லது 3 தசாப்தங்களுக்கு முன்பு ஏற்பட்டது தான்.

அங்கு மீன்பிடிக்கும் உள்ளூர் கிராமவாசிகள் இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு, உபகரணங்களை பயன்படுத்தும் முறைகளை கற்பித்து ஒரு பாரம்பரிய முறையை காப்பாற்ற வேண்டும்.’ என்கிறார்.

இதுபோல, தீப்பந்த ஒளியை வைத்து, இந்தியாவில் தமிழகத்தின் சில கடற்கரை மாவட்டங்களில் குறிப்பிட்ட பருவத்தில் கோலா (மத்தி) என்ற மீன்களை மீனவர்கள் பிடிப்பதையும் நாம் அறியலாம்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments