தனியார் ரத்த தான முகாம்கள் சேவையா? சந்தையா?

Report Print Maru Maru in கட்டுரை
தனியார் ரத்த தான முகாம்கள் சேவையா? சந்தையா?

அன்னதானம் பசியை போக்குகிறது, கல்விதானம் மடமையை போக்குகிறது, ரத்ததானம் மரணத்தையே போக்குகிறது.

ரத்த தானம் தவறல்ல

யாவும் தயாரான நிலையில் 10- 20 நிமிடங்களே ரத்த தானம் செய்ய போதுமானது. ஆனால், அது ஒரு பிரச்சினை இல்லை.

ரத்த தானம் இயற்கைக்கு மாறானது. பக்க விளைவுகள் ஏற்படக்கூடியது என பலருக்கு பயம் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபற்றிய முறையான ஆய்வுகளுக்கு பின்னரே மருத்துவம் ரத்த தானத்தை ஊக்குவிக்கிறது.

ஒரு ஆரோக்கியமானவர் உடம்பில் 5 முதல் 6 லிட்டர் வரை ரத்தம் உள்ளது. அதில் 200 - 300 மி.லி.வரை தானம் கொடுக்கலாம். அந்த ரத்தம் 24 மணிநேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவில் இருந்தே உற்பத்தியாகி விடுகிறது.

ரத்தத்தில் உள்ள செல்கள் மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து விடும். அதனால், புதிய செல்கள் உற்பத்தியாவது நம் உடம்பில் வழக்கமாக நடைபெறுகிறது. அதனால், ரத்த தானம் செய்வதால் உடலில் ரத்தம் குறைந்து பாதிப்போ பலவீனமோ ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என மருத்துவம் சொல்கிறது.

ரத்த தான தகுதிகள்

நன்கு உணவு உண்ட பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும். கைகள் நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

18 முதல் 60 வயதுவரை ரத்த தானம் செய்யலாம். ஆண், பெண் இருபாலரும் ரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

ரத்த ஹீமோகுளோபின் அளவு 12 - 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.

ரத்த தானம் செய்பவரின் எடை 50 கிலோவிற்கு குறையக்கூடாது.

தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராக இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் எடுத்திருக்கக் கூடாது.

எய்ட்ஸ், மேக நோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், வலிப்பு நோய் இருக்கக் கூடாது.

அறுவை சிகிச்சை செய்திருப்பவர்களும் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் ரத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மது அருந்தியிருந்தால் 24 மணி நேரம் கழித்தும், புகைப்பிடித்திருந்தால் ஒரு மணி நேரம் கழித்தும் ரத்த தானம் செய்யலாம். அதுபோல, ஒரு மணிநேரம் கழித்தே ரத்தம் கொடுத்தவர் புகைக்க வேண்டும் இல்லையேல் மயக்கம் ஏற்படும். கூடுமானவரை புகை, மதுப்பழக்கம் உள்ளவரிடம் ரத்த தானத்தை தவிர்ப்பதே நல்லது.

தொடர்ந்து ரத்த தானம் செய்பவர்கள் மூன்றுமாத இடைவெளி விட வேண்டும்.

ரத்தம் கொடுத்து முடிந்ததும் கையை நன்கு மடக்கி உயர்த்த வேண்டும். அது ரத்தம் கசிவதை தடுக்கும்.

சேமிப்பு வங்கிகள்

சேகரிக்கப்பட்ட ரத்தத்திலிருந்து தூய ரத்தமாகவும் பாதுகாக்கப்படுகிறது. தேவைகேற்ப ரத்த சிவப்பு அணுக்கள், தட்டுகள், பிளாஸ்மா என பிரித்தும் பாதுகாக்கப்படுகிறது.

ரத்தத்தையும் பரிசோதித்து, நோயாளிக்கு பொருந்துமா எனவும் பரிசோதித்த பிறகே செலுத்தப்படுகிறது.

ரத்த தான நன்மைகள்

ரத்த தானம் பெறுபவர்கள் மீண்டும் உயிர் பிழைத்து நன்மை அடைவதுபோல, ரத்தம் கொடுத்தவருக்கும் சுத்தமான புதிய ரத்தம் உடலில் பெருகுவது. அது மாரடைப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பது போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

முன்னேற்றமும் இயலாமையும்

ரத்த தானத்தில் நமக்கு முன்னேற்ற அடையாளமும் இருக்கிறது. இயலாமை அடையாளமும் இருக்கிறது.

ரத்தப்போக்கினால் ஒருவருக்கு நேர இருந்த மரணத்திலிருந்து, தானம்செய்பவர் ரத்தத்தை செலுத்தி காப்பாற்றி விடுகிறோம் அது மரணத்தை தள்ளிப்போட தெரிந்த ஒரு முன்னேற்றம்.

அதேசமயம், அறிவியலில் எவ்வளவு முன்னேறினாலும் ரத்தத்தை தொழிற்சாலைகளில் தயாரிக்க முடியாதது நம் இயலாமை.

தேவையா..? சேவையா..? சந்தையா?

மருத்துவத்துக்கும் சில தடுமாற்றங்கள் உண்டு அம்மை நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை 30 வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு கொடுத்து வந்துவிட்டு பிறகு, அதை தவறான முயற்சி என மருத்துவமே கைவிட்டதும் உண்டு.

விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு கொஞ்சம் ரத்தம் பிறரிடம் கிடைத்தால் பிழைக்க முடியும் எனும்போது, அதனால், கொடுப்பவருக்கும் பாதிப்பும் இல்லை என்ற நிலையில் ரத்தம் கொடுப்பது நியாயமானதே!

ஆனால், தனியாரும் அரசும் முகாம் நடத்தி ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ரத்தம் சேகரித்து சாதனைப்படைப்பது சரியா? தவறா? தெரியவில்லை. அந்த தான ரத்தம் இலவசமா? அல்லது விலையா? தெரியாது முறையாக பாதுகாக்கப்படுகிறதா? கெட்டு கொட்டப்படுகிறதா? தெரியாது.

ரத்தம் கொடுப்பதால் பின்விளைவு இல்லை என்று சொல்லப்படுவதால் மட்டும் அதிக அளவில் அதை வெளியில் எடுத்து பொருள் போல சந்தைப்படுத்துவதும் சரியல்ல.

உடலுக்குள் ஓடும் வரைதான் ரத்தத்துக்கு மரியாதை, அவசியமில்லாதபோது, ரத்ததானம் கூட உடலுக்கு காயம் இல்லாத ஒரு விபத்துதான்.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments