பாலஸ்தீனத்தில் குழந்தைகளின் அவலம்: ஐ.நா.வின் தீர்வு தினம் அனுஷ்டிப்பதா?

Report Print Maru Maru in கட்டுரை
பாலஸ்தீனத்தில் குழந்தைகளின் அவலம்: ஐ.நா.வின் தீர்வு தினம் அனுஷ்டிப்பதா?

பாதுகாப்பு உள்ள இடங்களில் வளரும் குழந்தைகளுக்கே அவர்களின் உரிமைகளை கையாள்வதில் பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை.

நாடுகளின் ஆக்கிரமிப்பு, அவ்வப்பொழுது போர் என உள்ள பகுதிகளில் அப்பாவியான குழந்தைகள் வாழ என்னென்ன தேவை?

அளவிட முடியாத அந்த பிஞ்சு நெஞ்சின் சோகங்கள், கர்வமுள்ள கருங்காலிப் பெரியவர்களுக்கு எப்படி புரியும்?

இஸ்ரேல்- பாலஸ்தீனமே ஊற்றுக்கண்

ஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜேவியர் பெரஸ் டிகெல்லர் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் தினமான ஜூன் 4ம் திகதியை புனித தினம் என்றார்.

1982 ஆகஸ்ட் 19 அன்று பாலஸ்தீனத்தில் அவசரநிலையில் ஐ.நா.வின் பொதுசபை கூட்டப்பட்டது.

இஸ்ரேலியரின் ஆக்கிரமிப்பு செயல்களால் பாலஸ்தீனத்திலும் லெபனானிலும் அப்பாவியான குழந்தைகள் பெரும் அளவில் இறந்தது, படுகாயமடைந்தது அங்கு விளக்கப்பட்டது. அதை கேள்வியுற்று பொதுச்செயலாளர் திகைப்படைந்தார்.

அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன்4ம் திகதி, பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.

மேலும், இந்த நாள் உலகம் முழுதும் தவறான நடவடிக்கைகளின் விளைவால், அப்பாவியான குழந்தைகளின் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் பாதிக்கப்படுவதை உறுதி செய்கிறது.

இந்த புனிதமான தினத்தில் எல்லா குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க ஐ.நா சபை அர்ப்பணிப்பு உறுதி செய்கிறது. இதை புனித கடமையாகவே பிரகடனப்படுத்துகிறது என்றார்.

முடிந்தது இவ்வளவு தானா?

ஐ.நா.சபை உலகின் 193 நாடுகளின் ஒரு கூட்டமைப்பு. ஆனால், உலகில் இரு நாடுகளுக்கு இடையே பல கண்டங்களில் பிரச்சினை இருக்கிறது.

அந்த நாடுகள் ஐ.நா.அமைப்பிலும் அங்கம் வகித்தே வருகின்றன. ஆனாலும், பிரச்சினை தீரவில்லை.

இது ஐ.நா.வின் பலவீனத்தையும் பலமுள்ள நாடுகளே தவறுகள் செய்கிறது என்பதையும் காட்டுகிறது.

பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியாமல், அந்த நாடுகளில் உள்ள அபாயகரமான சூழ்நிலையையும் மாற்ற முடியாமல், அங்குள்ள துன்பங்களை ஒரு தினம் ஒதுக்கி கொண்டாடினால் போதும் அதோடு தன் கடமை முடிந்து விட்டதாக ஐ.நா. அமைப்பு நினைக்கிறதா? அதனால், முடிந்தது அவ்வளவு தானா?

கருவியாகும் குழந்தைகள் குருவி போல

தாய், தந்தை, சகோதரன் சகோதரி என ரத்த சொந்தங்கள் கண்ணெதிரே குற்றுயிரும் கொலையுயிருமாக ரத்தவெள்ளத்தில் கிடக்கும் போது, குழந்தைகளுக்கு கூட யுத்தவெறி வரும்.

அவர்கள் கைகளிலும் துப்பாக்கிகள் எழும். அந்த குற்றத்திற்காக குருவி போல அவர்களையும் சுட்டுசாய்க்கின்றனர். இல்லாவிட்டல் அவர்கள் சுட்டுவிடுவார்களாம்.

இந்த வேட்டைச் சூழலுக்கு ஊற்றுக்கண் எது என்பது ஐ.நா.வின் கண்களுக்கு தெரியவில்லையா? இதற்கு தீர்வில்லையா?

அதிகரிக்கும் அகதிகள் பலி

ஆக்கிரமிப்புகளாலும், அதனைத் தொடர்ந்து நடக்கும் போர்களாலும் வறுமை நாடுகளில் ஏற்படும் நிர்வாக சீர்கேட்டாலும் அதனால், அங்கு உருவாகும் தீவிரவாதங்களாலும் பல நாடுகளில் மக்கள் வாழமுடியாத நிலை.

அதனால், போர் கெடுபிடியில்லாத நிர்வாக சீருள்ள ஐரோப்பிய நாடுகளை தேடி மக்கள் அகதிகளாக முதியவர், பெண்கள், குழந்தைகள் என கள்ளத்தோணிகளிலே வருகின்றனர்.

முறையான படகுப் பயணம் இல்லாததால் வழியிலே மடிகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் 880 அகதிகள் இறந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரைக்கும் 2, 500 பேர் மத்திய தரைக்கடல் பகுதியில் மடிந்துள்ளனர்.

தஞ்சமடையும் நாடுகளிலும் பாஸ்போர்ட், பாதுகாப்பு, உணவு, வேலை, மற்றும் உணர்வு ரீதியான பிரச்சினைகளால் குற்றவாளிகளாகின்றனர்.

இந்நிலையில் இறந்த அகதிகள் தங்களை விட பாக்கியம் செய்தவர்கள் என்றே அவர்களுக்கு எண்ணத் தோன்றும்.

பெரியவர்கள் நிலையே இப்படி இருக்கும் போது,பாசம், பாதுகாப்பு, கல்விக்காக ஏங்கும் குழந்தைகளின் பாடு எப்படி இருக்கும்?

குழந்தைகள் வாழ ஏதுவான ஒரு பூமியில் எல்லோருமே வாழலாம். போர்வீரர்களுக்கு மட்டுமே ஏதுவான பகுதியில் புல்பூண்டு கூட வளர முடியாது.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments