அழகாக காட்சிப்படுத்தப்படும் மலையக தமிழர்களின் இரத்தம் தோய்ந்த வாழ்க்கை

Report Print Jeslin Jeslin in கட்டுரை

இந்த உலகமானது கால ஓட்டத்திற்கு ஏற்ப மானிட பிறவிகளிடத்திலே பல்வேறு மாற்றங்களை உட்புகுத்தியுள்ளது, ஆரம்பத்தில் தனக்கே உரித்தான ஆளுமையுடன் முழு உலகையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு சாம்ராஜ்ஜியம்தான் தமிழினம்.

பிறப்பால், உழைப்பால் உயர்ந்த தமிழன், பிற்காலத்தில் தனது கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றிலும் தனது ஆளுமையை நிலைநாட்டி அழிக்கமுடியா விஷ்வரூப வளர்ச்சி கண்டுவிட்டனர்.

இது இவ்வாறு சென்றுகொண்டிருக்க வேற்று இனத்தாரின் ஆட்சித்திறன் தலைத்தோங்க ஆரம்பித்தது, வேற்றினத்தாரின் கலை, கலாச்சாரம் என்பன புல்லுறுவிகளாக தமிழரிடத்திலே ஊடுறுவ ஆரம்பித்தன.

இவ்வாறு, அந்நியர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டு இன்று திசையெங்கும் சிதறிபோயுள்ளனர் தமிழர்கள், இவ்வாறு சிதறுண்டுச் சென்று தற்போது எதிர்காலத்தை தேடிக்கொண்டிருப்பவர்கள் தென்னிந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்கள்.

முதுகெலும்பில்லாத மண்புழுகூட தம்மை எவரேனும் தடியால் தட்டும்போது துள்ளி எழுந்தேனும் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது வெளியிடும், ஆனால் அதற்கும் இடம்கொடாமல் இன்னாள் வரையில் மலையகத் தமிழர்கள் துன்புற்றுவருகின்றார்கள்.

இந்தியத் தேசத்தில் இருந்து கைக்கூலிகளாக மலையகத் தமிழரை அழைத்து வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம், எவ்வித மறுப்புமின்றி அவர்களை அனுப்பி வைத்தது இந்திய தேசம், பிறந்த மண்ணில்தான் சுதந்திரக்காற்றை சுவாசித்து வாழ வழியில்லை, குடியேறிய தேசமாவது எமக்கு அடைக்கலம் தரும் என்ற நம்பிக்கையில்தான் மலையகத்தமிழர்களும் இலங்கைக்குள் அடி எடுத்து வைத்தனர்.

இதற்காக கடும் உழைப்பை மாத்திரமே, அவர்கள் மூலதனமாக கொண்டு செயற்பட ஆரம்பித்தனர், காடுகளை வளமாக்கினர். நாட்டை செழிப்பாக்கினர். ஆனாலும், திரும்பும் திசையெல்லாம் முட்டுக்கட்டைகள்.

காடுமேடாகவும், கல்லுமுள்ளாகவும் காட்சிதந்த பூமியை எழில்கொஞ்சும் மலைநாடாக மாற்றினர் மலையகத்தவர், மண்ணை வளமாக்கியதுடன், அதே மண்ணில் செத்துமடிந்து தேயிலைச்செடிக்கு உரமுமாகினர். இலங்கையின் பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பாக திகழ்ந்தனர்.

ஆண்கள் மாத்திரமின்றி மலையக பெண்களும் எண்ணற்ற துன்பங்களை தினம் அனுபவிக்க நேர்ந்தது.

கருவைக்கூட ஈரைந்து மாதங்கள்தான் சுமப்பார்கள். ஆனால், கட்டிளமைப்பருவம் வந்ததும் தேயிலை தோட்டத்துக்குள் காலடி எடுத்துவைத்தது முதல் முதுமைக்குரிய அடையாளங்கள் முழுமையாக நெருங்கும்வரை மலையக பெண்கள் தேயிலைக் கூடையை தலையில் சுமப்பார்கள்.

எனினும், வறுமையே சொத்தாக மாறியது, துன்பம்தாங்காது சிலர் வெளியேறினர். ஏனையோர் உழைத்து களைத்தே மாண்டனர், அந்த கொடிய, துயர்மிக்க வரலாறு இன்றும் ஓய்ந்தபாடில்லை.

வறுமையின் கோரத்தாண்டவத்தால் கைக்கூலிகளாக அழைத்துவரப்பட்ட எம்மக்கள், தென்னிந்தியாவிலிருந்து வெறுங்கையுடன் வரவில்லை. பொருளாதார ரீதியில் சூனியமட்டத்தில் இருந்தாலும் கலைகளுக்கு அவர்களிடம் பஞ்சமிருக்கவில்லை. மலையகத்தில் பல பகுதிகளிலும் பாட்டு, கூத்து என வழிவடிவங்களில் கலைகளை வேரூன்றசெய்தனர்.

மயிலாட்டம், குயிலாட்டம், கோலாட்டம், காமன்கூத்து ஆகியவற்றையெல்லாம் ஒருசில தோட்டங்களில் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது, இதனை வாழ்வாதாரமாக்கொண்டு தொழில் செய்யும் மலையகத்தவரும் உள்ளனர்.

தன் ஊழைப்பு சுரண்டப்படுகின்றது என தெரிந்தும் தேனி தேன் சேகரிக்கும். அதுபோலவே மலையக மக்களும் வாழ்ந்து வருகின்றனர், வெள்ளையர்கள் மலையகத்தவரின் உழைப்பை சுரண்டினர், ஆனால் அவர்களது வாழ்வாதாரத்தை கண்டுக்கொள்ளவில்லை.

இந்தியா, பிரிட்டிஷ் ஆகிய நாடுகள் தமது பாதீட்டில் இலங்கைக்கு என பல வரப்பிரசாதங்களை ஒதுக்கினாலும் மலையக மக்களுக்கென எந்த ஒதுக்கீட்டை அள்ளி வழங்கியது என்பது கேள்விக்குரியதும் கவலைக்குரியதுமாகும்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகும்கூட இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மலையகத்தமிழர் விடயத்தில் எவ்வித நடவடிக்கையை மேற்கொண்டனர் என்பதும் கேள்விக்குரியது.

உதாரணமாக, பிரிட்டிஷின் எலிசபத் மகாராணி 1954ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார், மலையகத்தின் தலைநகராக விளங்கும் கண்டிக்கும் சென்றிருந்தார், இதன்போது மலையகத்தவர் மகாராணிக்கு பெரும் வரவேற்பளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சமீபமாக இலங்கையில் 2014 ஆம் ஆண்டு பொதுநலவாய அரசதலைவர்களின் மாநாடு நடைபெற்றபோது எலிசபெத் மகாராணியின் சார்பில் அவரது வாரிசுகள் பங்கேற்றிருந்தனர். மலையக பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

ஆனால் அப்போதும் கூட பிரிட்டிஷ் ஆட்சியில் அழைத்துவரப்பட்ட மலையகத்தமிழர் செழிப்புடன் வாழ்கின்றனர் என்ற மாயைதான் இலங்கை அரசியல்வாதிகளால் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

மலையகத் தோட்ட தொழிலாளர்களை இன்றும்கூட வேற்றுக்கிரக வாசிகள் போல நோக்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர், அதனால்தான், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையகத்தவர் முன்னேறிவிடக்கூடாது என்பதில் சில நயவஞ்சகர்கள் குறியாக இருக்கின்றனர் என்பதையும் இன்று மறுப்பதற்கில்லை.

தோட்டத்தொழிலாளர்கள் ஆரம்பகாலத்தில் அடக்கியாளப்பட்டபோது அவர்களுக்காக குரல் எழுப்புவதற்கு தொழிற்சங்க கட்டமைப்பொன்று இருக்கவில்லை. தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்க மலையகத்தவர் எவ்வாறு முயற்சி செய்தாலும் அதனைத் தோட்ட நிர்வாகம் அடியோடு அழித்துவிடும் நிலை காணப்பட்டது.

எனினும், கடும் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில், மலையக மக்களுக்கென குரல்கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் உதயமாகின. இதற்கான துவக்கபுள்ளியை நடேசய்யரே ஆரம்பித்து வைத்தார்.

முன்னரெல்லாம் தொழிலாளர்களின் நலன்களை முன்னிறுத்தியே தொழிற்சங்கங்கள் செயற்பட்டன. அதில் அரசியல் நோக்கம் இருக்கவில்லை. சந்தா பணத்தின்மூலம் வயிற்றை நிரப்புவதற்கும், வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கும் எவரும் முற்படவில்லை.

காலபோக்கில் இந்நிலைமை மாறியது. சந்திக்கு சந்தி தொழிற்சங்கங்கள் முளைக்கும்நிலை உருவானது. தொழிலாளர்களும் கூறுபோடப்பட்டனர்.

இன்று மலையகத்தில் மூலை முடுக்கெல்லாம் தொழிற்சங்கங்கள் உருவெடுத்துள்ளன, அவற்றை நோக்கும்போது,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

ஆரம்பத்தில் இலங்கை, இந்திய காங்கிரஸாகவே செயற்பட்டது. காலப்போக்கில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பெயர்மாற்றம் பெற்றது. அதற்கென அரசியல் கிளையொன்று இருக்கின்றது. தலைமை அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளது. தலைவர், பொதுச்செயலாளர் ஆகிய இரு பதவிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் வகிக்கின்றார்.

தொழிலாளர் தேசிய சங்கம்

1965ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கம் வி.கே. வெள்ளையனால் உருவாக்கப்பட்டது. இ.தொ.காவின் முக்கிய புள்ளியாக இருந்த அவர், கருத்து முரண்பாடு காரணமாக வெளியேறியே இச்சங்கத்தை ஸ்தாபித்தார்.

தற்போது இதன் தலைவராக அமைச்சர் திகாம்பரமும், பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்களும் செயற்படுகின்றனர். தொழிலாளர் தேசிய முன்னணியென அரசியல் பிரிவொன்றும் இருக்கின்றது.

இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம்

1958 ஆம் ஆண்டு கீர்த்தி மென்டிஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஜெ. ஆரின் தலையீட்டால் ஐக்கிய தேசியக்கட்சியின் தொழிற்சங்கமாக மாறியது. ஜெ.ஆர் ஜயவர்தனவுக்கு பிறகு காமினி திஸாநாயக்க தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

புத்திரசிகாமணி, வேலாயுதம் போன்ற தமிழர்கள் பொதுச்செயலாளர் பதவியை வகித்தனர். வேலாயுதம் மரணித்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இலங்கையில் அதிக கிளைகளைகொண்ட தொழிற்சங்கமாக இது பார்க்கப்படுகின்றது.

மலையக தொழிலாளர் முன்னணி

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் சந்திரசேகரனால் உருவாக்கப்பட்டது. இதன் அரசியல் கிளைதலைவராக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் செயற்பட்டு வருகின்றனர்.

இது தவிர, அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம், அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், செங்கொடி சங்கம், சுதந்திர சேவையாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் இடதுசாரி முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, மலையக தேசிய முன்னணி, புதிய தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு, புதிய ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் போன்ற 30 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன.

ஆனாலும், இன்றளவில் மலையகத்தவரின் அடிப்படைப் பிரச்சினைகள் ஏதும் தீர்ந்தபாடில்லை, அவர்களுக்கான தீர்வு கிடைத்தபாடில்லை.

வஞ்சகமின்றி உழைப்பை கொட்டித்தரும் மலையகத்தவரின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு தனது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதே..

இந்த ஊதியத்தை பெற்றுக்கொள்ளத்தான் எத்தனை போராட்டங்கள்.. எத்தனை வாக்குறுதிகள்.. தேர்தல் மேடைகளில் மாத்திரம் மலையகத்தவரின் புகழ் பாடும் அரசியல் தலைமைகள் அதன் பின்னர் அவர்களின் போராட்டத்தின் போதும் கோரிக்கைகளின் போதும் பாராமுகமாய் இருப்பது ஏனோ??

200வருட கால லயன் வாழ்க்கை முறையை மாற்றுவோம்!! தனிவீட்டுத்திட்டம் இன்றே சாத்தியப்படும் என காலகாலமாய் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்!! தற்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்க ஆரம்பித்துள்ளன.

இன்று மலையகத்தவரை வைத்து இலகுவாக எவ்வாறு அரசியல் நடத்தலாம் என்பதை நன்கு கற்றரிந்தவர்களாகத்தான் மலையக அரசியல்வாதிகளும் இருக்கின்றனர்.

அத்துடன், வெலி உலகிற்கு மலையகத்தவரின் தற்போதைய நிலை தொடர்பில் தவறான எண்ணப்போக்கையும் உணர்த்துகின்றனர்.

குறிப்பாக, இலங்கைக்கு வருகைத்தந்திருந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் ஆகட்டும், கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியாகட்டும், இருவரிடத்திலும் மலையகத்தவர் தொடர்பான ஒரு பொய்யான தோற்றமே காண்பிக்கப்பட்டது.

கமரூனின் வருகையில் மலையகத்தவர் மகிழ்ச்சியுடன் பணிபுரிவதுபோல ஒரு மாயை, மோடியின் வருகையில், மோடியின் வருகைக்காக மாற்றப்பட்ட, அபிவிருத்தி செய்யப்பட்ட மலையகம், இது தான் மலையகத்தவர் தொடர்பில் நம் அரசியல்வாதிகள் வெளியுலகிற்கு காட்டும் மாயைகள்.

இந்த நிலை என்று மாற்றம் அடையும்? மலையகத்தவரின் தலைவிதி மாற்றி எழுதப்படுமா? ஒரு அரசியல் புரட்சி ஏற்பட்டு மலையகத்தவரும் சம அந்தஸ்த்துடன் வாழ மாட்டார்களா? மேலும் மலையக அரசியல்வாதிகள் தமது பொறுப்புணர்வை எப்போது உணர்ந்து செயற்படப்போகின்றனர் என்ற பல்வேறு கேள்விகள் இன்று எம் முன் உயர்ந்து நிற்கின்றன.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers