மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அசம்பாவிதம்! 3 தசாப்தங்களாக தொடரும் ஆபத்து

Report Print Sujitha Sri in கட்டுரை

தமிழ் - சிங்கள புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மக்கள் சில நாட்களுக்கு முன்பாகவே ஆரம்பித்திருந்த நிலையில் இன்றைய தினம் நாடெங்கிலும் பண்டிகை களைகட்டியுள்ளது.

இந்த சந்தரப்பத்தில் கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் நேர்ந்த பாரிய அசம்பாவிதம் தொடர்பில் நாம் நினைவுப்படுத்தியே ஆக வேண்டும்.

ஆம்.. அனைவரும் பண்டிகை கொண்டாட்டத்தில் திளைத்திருக்க நேர்ந்த அந்த சம்பவத்தில் சுமார் 32 வரையிலான உயிர்கள் காவு வாங்கப்பட்டதை எவ்வாறு மறக்க முடியும்.

மீதொட்டமுல்ல எனும் பெயரை கேட்டதுமே மூக்கை மூடிக்கொள்ளும் பலர் நம் மத்தியில் இருக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் யாரும், அனைவரும் வெறுக்கும் வகையில் துர்நாற்றம் நிறைந்த இடமாக மீதொட்டமுல்ல மாறியமைக்கு யார் காரணம்?

அல்லது அந்த இடம் இவ்வாறே தான் இருந்ததா? என்பதைப் பற்றி ஒரு கணமும் யோசித்தது இல்லை என்பதே உண்மை.

மீதொட்டமுல்ல இன்று அனைவராலும் வெறுக்கப்படும் துர்நாற்றம் மிக்க குப்பை மேடுள்ள பிரதேசமாக இருந்தாலும் 30 வருடங்களுக்கு முன்னர் இது அழகிய வயல்வெளிகளுடன் கூடிய மனங்கவரும் கிராமமாகும் என பலரும் தெரிவிக்கின்றனர்.

வயல்வெளிகள் நிறைந்து சில காலங்களின் பின் காடாக மாறிய குறித்த பகுதியில் 1990 முதல் கொலன்னாவ நகரசபை குப்பை கொட்ட ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் எழவே பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் எந்த திட்டங்களும் செயற்படுத்தப்படாமல் ஆறப்போடப்பட்டதன் விளைவே சுமார் 32 உயிர்கள் பலியாகியமைக்கு காரணம்.

அண்ணளவாக 23 ஏக்கர் 300 அடி உயரத்திற்கு பிரமண்டமாக வளர்ந்து விட்ட இந்த குப்பை மலை உருவாக பெரும் பங்கை நாமே வகித்துள்ளோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கொழும்பில் சேரும் கழிவுகள் அனைத்தும் குறித்த இடத்திற்கே செல்கின்றன.

பெருந்திரளான மக்கள் வாழும் இந்த கொழும்பு மாவட்டத்தில் சேரும் கழிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டால் இந்த மலை உருவாகத்தானே செய்யும்!

இவ்வாறான நிலையில் மீதொட்டமுல்லயில் குப்பை கொட்டுவதற்கு எதிராக மக்களின் போராட்டம் நீடித்த வண்ணமே இருந்த போதிலும் கூட அது உரியவர்களின் காதுகளுக்கு எட்டவில்லையா அல்லது வேறு ஏதும் காரணங்களால் புறக்கணிக்கப்பட்டதா என்பது இது வரையில் மர்மமாகவே உள்ளது.

எனினும் சில சமயங்களின் மக்களின் உக்கிரமான எதிர்ப்புகள் காரணமாக குப்பை லொறிகள் திருப்பி அனுப்பட்ட சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. சுதந்திர போராட்டத்தை போல், போராட்ட வரலாறு கொண்டது தான் இந்த மீதொட்டமுல்ல மலையும்.

இது இவ்வாறிருக்க கடந்த வருடம் தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி பிற்பகல் கொலன்னாவ - மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவு அனர்த்தம், பாரிய விளைவை ஏற்படுத்தியிருந்தது.

இந்த அனர்த்தத்தில் 32 பேர் வரையில் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். வீடுகள் பல முற்றாக சேதமடைந்த அதேவேளை, அப்பகுதியில் இருந்து பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

இந்த அனர்த்தம் ஒரு விபத்தா அல்லது திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட சதி வேலையா என்பது குறித்து இன்று வரை பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.

குப்பை மேடு சரிந்து விழுந்ததன் பின்னர் அது தொடர்பான ஆய்வுகள் பல நடத்தப்பட்டன. குறித்த ஆய்வுகள் முன்னதாகவே நடத்தப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்காது என நாடாளவிய ரீதியில் பலராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் அரசியல்வாதிகள் மீது விரல் நீட்டி கோபத்தை தீர்த்துக் கொள்ளும் எமக்கு எமது தவறு இன்னும் ஏன் புரியாமலிருக்கிறது.

எமது அறியாமை தொடரும் வரையில் மீதொட்டமுல்ல போன்ற மலைகள் நாட்டின் பல பகுதிகளிலும் உருவாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இவ்வாறான அவலங்கள் இடம்பெறும் போது மாத்திரம் அதனை பேசிவிட்டு, ஒருவர் மாற்றி ஒருவர் கைநீட்டி தவறு பிடித்துக் கொண்டு வாழ்ந்தால் செயற்கை அனர்த்தங்களை தடுக்க முடியாது.

எமது குப்பையை வெளியில் விடாமல் நாமே அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுப்பது நமக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நல்லது. அனைவருக்கும் நாமே முன்மாதிரியாக திகழ வேண்டும்.

நம்மில் வரும் மாற்றமே நாட்டையே மாற்றும். அதனை விடுத்து யார் மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. மீதொட்டமுல்ல அவலம் போன்றதொரு மற்றுமொரு அனர்த்தம் நிகழாதிருக்க இந்த சம்பவத்தை அனைவரும் ஒரு பாடமாக எடுக்க வேண்டும்.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்