ஸ்ரீதேவி என்ற ஒற்றை வார்த்தையில் மறை(ற)க்கப்பட்ட படுகொலைகள்!!

Report Print Jeslin Jeslin in கட்டுரை

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களையும், ஊடகங்களையும் தனி பெரும் சக்தியாக ஆட்சி செய்துகொண்டிருப்பது வசீகர நாயகி ஸ்ரீதேவியின் மரணச் செய்திதான்.

உலகின் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் இதயத்துடிப்பையும் ஒரு கணம் சற்றே நிறுத்தி வைத்துவிட்டது நடிகை ஸ்ரீதேவியின் இந்த இழப்பு.

உண்மையில் எண்ணற்ற திறமைகளுடன் தன்னிகரற்ற தலைவியாக, தமிழ்த் திரையுலகில் மாத்திரமின்றி இந்திய திரைத்துறை வரலாற்றிலேயே தனக்கு நிகர் தானே என தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை நடத்தியவர் நடிகை ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீதேவியின் இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு, ஒரு கலைஞர் என்ற ரீதியில், ரசிகர் என்ற ரீதியில், ஒரு மனிதன் என்ற ரீதியில் மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டிய பேரிழப்புதான் நடிகையின் இழப்பு.

ஆனால், அதையும் தாண்டி மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டிய பல சம்பவங்கள் நொடிக்கு நொடி எம்மைக் கடந்து சென்று கொண்டிருக்கையில் நடிகையின் இழப்புக்கு செய்யப்படும் விளம்பரங்கள் வருத்தத்திற்குரியது.

இதற்கு, சில தினங்களுக்கு முன்னர் இந்தியா கேரளா மாநிலத்தில் மது என்ற ஒரு ஆதிவாசி இளைஞன் ஒருவர், அரிசி திருடிய குற்றத்திற்காக அடித்துக்கொள்ளப்பட்டமை சான்றாக காண முடியும்.

உலகில் மனிதம் என்னும் ஒன்று புதைகுழியில் புதைக்கப்பட்டு விட்டது என்பதை வெளிப்படுத்தியது இந்த கொலை.

அந்த ஆதிவாசி இளைஞன் பொன், பொருள், பணம் என மனிதனின் அற்ப ஆசையை திருப்திப்படுத்தும் எந்த ஒன்றையும் திருடவில்லை, அவனது பசியைத் தீர்க்கும் வகையில் ஒரு பிடி அரிசியைத் திருடினான் என அற்ப மனிதர் கூட்டம் அந்த இளைஞனை துடி துடிக்க கொன்று தீர்த்தது.

ஆனால், இன்று மேடை போட்டு, பத்திரிகையாளர்களைக்கூட்டி உலகம் காண தமது வருத்தங்களையும், அஞ்சலிகளையும் கொட்டித் தீர்க்கும் உலக பிரபலங்களும், பெருந்தகைகளும் அந்த ஆதிவாசி இளைஞன் விடயத்தில் குருடராகினரோ அல்லது செவிடராகினரோ என்றே கேட்கத் தோன்றுகின்றது.

குடித்துவிட்டு மதுபோதையில் மயங்கி உயிரிழந்த ஒப்பனை நாயகியின் புகழ்பாடும், கண்ணீர் சிந்தும் திரையுலகினருக்கும், ரசிகர் வட்டாரத்தினருக்கும் மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை கற்பிக்கவே தனி ஒரு தலைமுறை வேண்டும்போல.

இவ்வாறான மனதை உருக்கும் படுகொலைகள் நடந்தபோது, மெத்தனப்போக்கைக் கடைபிடித்தது மாத்திரமின்றி குருடரான மதி கெட்ட இந்த மனித இனம் நடிகை ஸ்ரீதேவியின் இறப்பால் ஞானக்கண் திறந்ததுபோல அறிக்கை விடுவதும், கண்ணீர் சிந்துவதும் எங்கணம் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

குறித்த ஒரு ஆதிவாசி இளைஞனை மாத்திரம் நாம் இதற்கு உதாரணமாக பார்க்க முடியாது, மாறாக திரையுலகிலேயே புறக்கணிக்கப்பட்ட பல கலைஞர்களையும் எடுத்துக்காட்டாக கூற முடியும்.

மறைந்த கவிஞர் வாலி தொட்டு, இலங்கையின் புகழ் பூத்த பொப் இசைப் பாடகர் மனோகரன் மற்றும் தென்னிந்தியத் திரை உலகிற்கு ஈழ மண்ணின் மட்டக்களப்பு மாநகர் தந்த பல்துறை கலைஞர் பாலு மகேந்திரா அவர்களின் உயிரிழப்பு என அறிக்கையிட்டுக்கொண்டே போகலாம்.

எதிர்காலத்திற்கென தனது கலையை சேமித்து வைத்துவிட்டுச் சென்ற பொக்கிஷங்கள் இவர்கள், இவர்களது மறைவையும் எமது பிரபலங்கள் தட்டிவிட்டு கடந்து சென்றமை வருத்தத்திற்குரியது.

நிரந்தரமற்ற புகழுக்கும், ஒப்பனைக்கும் தலைவணங்கும் எமது மனிதம் மறந்த மனிதர்கள், அன்று ஈழத்தில் கொத்து கொத்தாய் சாதாரண மக்கள் கொன்று குவிக்கப்படும்போது எங்கிருந்தார்கள்?

இன்று, தமிழகத்தில் 8 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதுடன், சிறுவனின் தாய் மற்றும் 14 வயதுடைய சகோதரியும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் இதைக் கேட்டும் ஏன் ஊமையாகிப் போயினர் எமது மானுடப் பிறவியினர்?

சமூக வலைத்தளங்களில் பிறர் காண ஸ்ரீதேவிக்காக துயருறும் எம்மவர்கள் அன்று கேரளாவில் ஆதிவாசி இளைஞனை ஏன் அடித்துக் கொன்றார்கள்?

இன்று சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக எண்ணற்ற சிறுவர்களின் இன்னுயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது, இதிலும் மௌனம் காக்கின்றோமே! எங்கே எமது மனிதம்?

இன்று ஸ்ரீதேவியின் வெற்று உடல் அவரது வீட்டிற்கு கொண்டுச் செல்லப்படும் முன்னமே, அவரது வீட்டின் வாசலின் முன்னே, முழு இந்திய திரை உலகினரும் தவம் கிடப்பது ஏன்?

தென்னிந்திய திரையுலகின் மூத்த பிரபலங்கள் தொட்டு, இளைய தலைமுறையினர் வரை இன்று ஸ்ரீதேவிக்காக கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர், இந்தக் கண்ணீரில் அந்த ஆதிவாசி மகனை இழந்த தாயின் கண்ணீர் வலுக்கட்டாயமாக மறைக்கப்பட்டு விட்டது.

கலைஞர் என்ற ரீதியில் ஸ்ரீதேவியின் இழப்பு ஈடுசெய்ய முடியதாததொன்று, ஆனால் அனைத்து உயிர்களுடனும் ஒப்பிட்டு நோக்கும்போது அவரும், கொல்லப்பட்ட ஆதிவாசி இளைஞனின் உயிருக்கு சமமானவர்தான்.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers