விபத்துகளின் தாக்கம் தமிழினத்தின் இருப்பிற்கே அச்சம்

Report Print Murali Murali in கட்டுரை

தமிழர்கள் உலகளவில் குறைந்தளவு எண்ணிக்கை கொண்ட இனக்குழுவினர். பல்வேறுவகையாக பிரிந்து பல்வேறுநாடுகளில் பல்வேறு இனமதப்பண்பாடுகளை மொழிகளை உள்வாங்கி மேலும் பிரிக்கமுடியாததும்எவ்வகையிலும் ஒருங்கிணைய முடியாததும், இதற்குமேலும் இழக்க ஏதும் இல்லாத இனக்குழுமம் தமிழினம்.

உலக நாடுகளில் மாநிலங்களில், நகரங்களில் மிகச்சிறுபான்மையானவர்கள் என்ற நிலையில் இருப்பவர்கள் தமிழர்கள். கடின உழைப்பு திறன்கொண்ட இவர்கள் உயர்ந்து வாழும் எல்லை தாழ்ந்தே உள்ளது?

இந்த நிலையில் இன்று உலகமயமாக்கல், பொருளியல் பொருளியல் காரணங்களாலும் பணச்சுரண்டல் நிறுவனங்களின் திட்டங்களாலும், அரசியல் சார்ந்த மறைமுகத்திட்டங்களாலும் எமது இனம் வீதி விபத்துகளிலும், மறைமுகமான பலவகைப்பட்ட விபத்துகளில் சிக்கிக் கொண்டு தாமாகத் தமிழினத்தை அழிப்பதனையும், தமிழினம் பெருகுவதற்கானவாய்ப்பின்றிய இறப்பு பிறப்பு விகித நடைமுறைகள் காணப்படுகின்றன.

நாளாந்தம் தமிழ் ஊாடகங்களில் யாழ், கொழும்புக்கான தொடருந்து பாதைக்கடவைகளில் நிகழும் விபத்தால் ஏற்படும் இறப்புகள் பற்றிய செய்திகள் தொடர்கின்றன.

இது இன்று தலைவர்களால் அரச நிர்வாகங்களால் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுக்கப்படக்கூடிய இனச்சிக்கல் இன்றிய ஒரு நிலையில் தீர்கக்கூடிய ஒன்று.

அதற்கான எந்த அக்கறையும் இருப்பதாகத்தெரியவில்லை. எமது இனத்திற்கு இலங்கையில் தொடரான இழப்பிற்கு ஏதுவான காரணிகளில் முக்கியமானதாக இருந்துவரும் இன்றைய தமிழர்களின் மனநிலைகள் பல காரணங்களால் மன அழுத்தங்கள் கொண்டநிலை நீடித்திருப்பதை எவரும் உணரலாம்.

பரீட்சை முடிவு முதல் காதல் தோல்வி ஈறாக கடன்தொல்லைகள் பெண்கள் ஏமாற்றப்படல் இவ்வாறாகவும் தொடருந்து பாதைகள் தற்கொலைக் களங்களாகத் திகழ்கின்றன.

இவைகளும் தமிழ் ஊடகங்களில் வரும் குறையாத செய்திகள். இது தவிர கொழும்பு பயணத்திற்கான பிறபோக்குவரத்து நடைமுறைகளும் உள்ளன. அதன் காரணமாகவும் விபத்துகள் தொடர்பான செய்திகள் நாளாந்தம் வெளிவந்தவண்ணமுள்ளன.

சிற்றுந்துகள், பேருந்துகள், உந்துருளிகள், முச்சக்கர வாகன விபத்துகளென பிரதான வீதிகளிலும் ஊர்ப்புறங்களில் நிகழும் விபத்துகள் தற்கொலைகளென இழப்புக்கள் அதிகரித்துகாணப்படும் காலம்.

இன்று போர் இல்லை என்றாலும் உயிர் இழப்புகள் அதிகரித்தவண்ணமே உள்ளன. ஒருவரை இழக்கும் போது இன ரீதியாக எண்ணும் போது அவரால் பிறக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கும் பிள்ளைகள் குடும்பம் வளம் இழந்து பிறப்பு வீதம் பாதிக்கப்படும்.

இது நாளாந்தம் நிகழ்கின்றது. இது அரசியலின்றி தீர்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால் நிகழ்ந்த உள்நாட்டு போர் விளைவுகளின் பாதிப்புகளுக்கான போராட்டங்கள் காணிகள் மீட்பு, காணாமல் போனவர்களுக்கான போராட்டங்கள் அவற்றை தீர்க்க தாம் பெரிய அக்கறையுள்ளவர்கள் போன்ற வெளித்தோற்றப்பாட்டினை அரசதரப்பினரும், தமிழ்த்தரப்பினரும் காண்பிப்பதும் காணக்கூடிய ஒன்றாக உள்ளது.

பல தீர்க்கப்படாதனவாகவும் உள்ளன. இவற்றுடன் ஒப்பிடுகையில் தமிழர்களின் விபத்துகள் தொடர்பான இழப்புகளுக்கு தீர்வுகாணக்கூடிய நிலைகள் இருந்தும் அவற்றில் அதற்கான மிகுந்த அக்கறைகள் இல்லாமை இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கையை வேகமாகச்சரிவடையச் செய்யும் காரணிகளில் ஒன்றாக அது எதிர் காலத்தில் இருக்கும் என்ற ஐயம் என்மனதில் மட்டுமல்ல எல்லாத் தமிழர்களிடத்திலும் மிகக்கவனமாக எண்ணப்படவேண்டிய நிலையில் உள்ளோம்.

மலையகத்திலும் சரி இலங்கையில் எங்கும் தமிழர்கள் அவசியமில்லாமல் இழக்கப்படும் இழப்பாகவும் தவிர்க்கப்படக்கூடிய ஒன்றாகவும் உள்ளது.

வீட்டைவிட்டு வெளியில் நடந்து போனாலும் மிதியுந்தில் ஒழுங்காகவும் கவனமாகவும் சென்றாலும் ஏனைய வாகனங்களில் வருபவர்கள் கவனக்குறைவாக வந்து இந்த அப்பாவிகளை விபத்திற்குள்ளாக்கி மரணிக்கச் செய்து விடுகின்றார்கள்.

உண்மையில் எண்ணிப்பாருங்கள் அவசியமற்ற பயத்திற்கும் இழப்பிற்கும் தமது நடவடிக்கைகள் தான் காரணம். இதற்கு இனம் சார்ந்த அரசியல் அல்ல காரணம்.

அல்லது இருந்தாலும் அதனைத் தீர்க்க வேண்டிய பொறுப்பும் எமக்கு இருக்கின்றது தானே. அது தவிர்த்து மனிதம் உயிர் என்று எண்ணுகையில் அரசு வாகன இறக்குமதி செய்வதில் உள்ள அக்கறை, எரிபொருள் இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் உள்ள திறன் வேறானது.

ஆனால் தமது நாட்டு உயிர்களின் இழப்புகள் பற்றி எண்ணாமை, அவை தொடர்பாக எந்த கிராமசபை உறுப்பினரோ, நகரசபை உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ எந்தசபையிலோ மேடையிலோ பாராளுமன்றத்திலோ பேசியதாககத் தெரியவில்லை.

மக்கள் நலன் சார்ந்த எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் குறைந்து விட்டார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு இதுவாகும்.

எனவே இதனை மக்களும் ஊடகங்களும் கவனத்தில் கொண்டு வழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பாரிய தாக்கத்தின் ஏற்படுத்தி இதனை தீர்க்கலாம்.

அப்பால் பாடசாலைகள் வழிபாட்டு இடங்கள் பொது நிகழ்வுகள் வீதிகளில் விபத்து நிகழும் கவனம் என்ற நினைபடுத்தல் பதாதைகள், அவசியமற்ற கவனமற்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

வாகனங்கள் இன்றிய ஒழுங்கைகள் வீதிப்பயன்பாடுகளைக் கண்டறிதல் இவற்றை தவிர்ப்பதற்கான வழிகளைக்கண்டறிய ஊக்கிவிக்கவேண்டும். இன்றைய உலகில் மிகமுக்கியமான ஒன்றாக உள்ளது.

தமிழகத்திலும் விபத்துகள் அதிகம். அன்றாடச் செய்திகள் அதனை உணர்த்துகின்றன. புலம் பெயர் தமிழ் ஊடகங்களிலும் விபத்துகள் பற்றிய செய்திகள் அதிகரித்துள்ளன. எனவே மகிழ்விற்கான அல்லது அவசிய தேவைக்கான போக்குவரத்திற்கான வாகனப்பாவனைகளில் விழிப்புணர்வு காலத்தேவையின் நிமித்தம் உருவாகியுள்ளது.

விபத்தின் ஆபத்தை மனதில் எக்கணமும் எண்ணி வாழவேண்டிய நிலையில் உள்ளோம். இயற்கை, ஓசோன் ஓட்டை, வெப்பம், வெள்ளம் இவற்றிற்கு நாடுகளவில் உலகளவில் தீர்வுகாண எண்ணும் நிலையில் வீதிவிபத்து பற்றி தனிநபர்கள் முக்கியமாக எண்ண வேண்டிய தேவைக்காலமாக காலம் மாறியிருப்பதை நாம் உணர்ந்து வாழவேண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

கட்டுரையின் தொடக்கத்தில் முகவுரையில் குறிப்பிட்ட எமது இனம் சார்ந்த மாற்றங்களும் எமது இனம் எதிர்கொண்டு நிற்கும் இடர்களில் இலகுவாக தீர்க்கக் கூடிய ஒன்றான இது எண்ணப்படாது இருப்பது முழுஉலகிலும் வாழும் தமிழர்களின் கவனத்தில் கொள்ளப்பட வேண்டி நிலையில் உள்ளோம்.

எனவே தமிழகம், மலேசியா, சிங்கப்புர், அந்தமான்தீவு, பர்மா, பாளி, ஆபிரிக்கா, கபிரீயியன் தீவுகளில், மொரிசியசு ஆகிய புலம்பெயர்ந்த நாடுகளிலும் அணுபிரிக்கப்பட்டது போல் பிரிக்கப்பட்டாலும் தமிழ் மொழியின் கூறுகள்.

தமிழ் இனம் என்ற அடிமரத்தின் கிளைகள் எப்படித்தறிக்கப்படுகின்றன, மாற்றமடைந்து ஒட்டுகிளைகளாகின்றன எடுத்துக்காட்டாக அந்தமானில் அதிகமாக தமிழர்கள் இருந்தார்கள்.

இந்திய அரசின் இந்தி மொழிக் கொள்கை, மதப்பண்டுக் கொள்கை, தந்திரோபாயத் தன்மையால் அந்தமானில் வாழ்ந்த தமிழர்கள் தமிழர்கள் என்ற அடையாளமான தமிழ்மொழியையும் பண்பாடுகளையும் இழந்து இந்தியர் கிந்திக்காரர் என மாற்றங்கண்டுள்ளதுடன், கலப்பு திருமணங்களும் தமிழனத்தை பாதித்து மாற்றினமாக மாறியுள்ள பட்டறிவை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் மக்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

அந்தமானில் நடந்தவை பர்மாவில் இந்தியர்களாலும் பௌத்தர்களாலும் நிகழ்ந்தது. தமிழர்கள் அல்லாதவர்களாக மாற்றம்கண்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த மாற்றங்களை நேரில் கண்ட தமிழ் ஆர்வலர் இலங்கை மலையகத்தில் பிறந்து மலேசியாவில் வாழ்ந்தவரான அமரர் இரா.வீரப்பனார் எமக்கு நேரிலும் தென்னாபிரிக்காவில் 77 நாட்கள் என்ற நுால் வாயிலாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் உள்ள தமிழர்கள் சமயப்பண்பாட்டில் இந்தியர்களாகவும் குறைந்தளவில் தமிழர் என்ற அடையாளத்திற்கு தமிழ்ப்பெயர்களை உடையவர்களாகவும் தைப்பூசத்தை பெரிய கொண்டாட்டமாகக்கொண்டாடும் நிலையில் இந்தியர் என்ற தாக்கம் பெற்றவர்களாகவே மாற்றம் கண்டுள்ளனர்.

இதனை உணர்ந்த அமரர் வீரப்பனார் அடே தமிழர்களே நீங்கள் தமிழ்நாட்டில் இருந்துவந்தவர்கள். உங்கள் தாய்மொழி தமிழ் அதனை உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். உங்கள் தமிழ் கோவில்களில் தமிழைக்கற்பியுங்கள் தமிழ்ப்பண்பாட்டை அறியச் செய்யுங்கள்.

1986 பயணத்திலும் 1996 ஆண்டுப்பயணத்தின் போது அவர்களின் கோவில்களிலும், பொது அமைப்புகளிற்கும், தமிழ் சங்க நிர்வாகங்களுக்கும் எழுச்சி ஊட்டி விளங்கச் செய்து கோவில்களில் தமிழ்மொழி வழிபாட்டினையும், திருமுறைகளையும், தமிழ்க்கல்வியையும் மீண்டும் புத்துயிர் பெறச்செய்தார்.

அதன் வாயிலாக இன்று தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று தமிழர்களாக உருமாறியும் உருவாக்கப்பட்டும் வருகிறார்கள் என்பது உண்மை.

அமரர் வீரப்பனார் தென்னாபிரிக்கா பயணத்தின் போது எழுதிய மடல்கள் தமிழுணர்வை ஊட்டுவதாகவும் மாற்றத்தையும், விழிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தலாம் என்ற வகையினை நடைமுறை வெற்றியினை புகட்டுவதாகவும் இருந்தது.

பல செய்திகள் படங்களை காட்சிகளை எனக்கு அனுப்பிவைத்தார். மொரிசியசிலும் இத்தகைய நிலையை உணர்ந்து மாற்றியமைத்தார், தமிழர்கள் மொரிசியசில் குடியேறிய 250ம் ஆண்டு நினைவுத்துாண் 1986 இல் மொரிசியசுதீவின் மத்திய நகரில் நிறுவப்பட்டது.

பாண்டுச்சேரியைச்சேர்ந்த மதுரகவி அவர்களும், மலேசியத் தமிழ் அறிஞரில் ஒருவரான அமரர் மு.மணிவெள்ளளையனார் அவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து வழிபட்டதாகவும் பாண்டிச்சேரி தமிழ் இதழ் ஒன்றில் எழுதிய சிறிய தொகுப்பை திரு.மதுரகவி அவர்கள் அனுப்பிவைத்தார்.

பர்மாவிலும் தமிழுணர்வாளர்களை உருவாக்கினார். இங்கு தமிழ்ப்பள்ளிகள் கோவில்களில் இயங்குகின்றன. தமிழ் மொழித் தேர்வுகள், தமிழ்மொழி வழிபாடுகள் கோவில்களில் நிகழ்கின்றன.

இத்தகைய விழிப்புணர்வை இந்த நாடுகளில் அந்தச் சிறிய மனிதனில் பெரிய ஆற்றல் குடிகொண்டிருந்தமையால் தமிழ் உணர்வு வெற்றி பெற்று தமிழ் பலம் பெற்றிருப்பதை நான் உணர்ந்து மகிழ்கின்றேன்.

இத்தகைய நடவடிக்கைகள் இல்லாது போயிருந்தால் தென்னாபிரிக்கத் தமிழர்கள் அந்த பிரதேச மொழியை மட்டும் பேசும் தமிழ்ப்பெயர் கொண்ட மனிதராக தைப்பூசம் கொண்டாடும் இந்தியக்கிந்தி ,மராட்டிய இனத்தவர்களாக மாறியிருப்பார்கள்.

காரணம் இந்திய அரசின் ஏற்பாட்டில் நிதி உதவிகள் வழங்கப்பட்டு பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டும் வட இந்தியப்பண்பாட்டு நிகழ்வுகள் புகுத்தப்பட்டு தமிழர்களிடையேயும் பரப்பப்பட்டிருந்தது.

எனவே, தமிழினம் பல நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளமை இன்று நேற்றல்ல 1730 ம் ஆண்டில் மொரிசியசில் பிரஞ்சுக்காரர்களால் குடியேற்றப்பட்டார்கள்.

இத்தகைய நாடுகளில் தமிழர்கள் மூன்றாம் நான்காம் ஐந்தாம் தலைமுறையினர் எத்தகைய மாற்றத்திற்குட்பட்டார்கள் என்பதைக் கற்றுக்கொண்ட படமாக பட்டறிவாக்கொண்டால் தான் நல்ல எதிர்காலத்திட்டமுடன் புலம்பெயர்நாடுகளில் தமிழர் அழிவதையும் தமிழர் மாறுவதையும் மாற்று இனத்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு தமிழ்மொழியை மறந்து தமிழ்ப்பண்பாட்டை இழந்து ஒருகலப்பினமாகவும் அல்லது கறுப்பினமாகவும் வெள்ளையினமாகவும் மாறிக் கொண்டிருப்பதை மாறியிருப்தை உணர்ந்து,

எமது புலம் பெயர் இலங்கைத்தமிழர்கள் எதிர்காலத்தில் செயல்படாது விட்டால் அந்தநாடுகளில் நடந்த இந்திய நாட்டு தாக்கமும் அவரவர் வாழும் நாட்டுத்தாக்கமும் தமிழினத்தை வெகுவாகப்பாதிக்கும் தமிழ் மொழியின் தமிழ் இனத்தின் அடிப்படைகள் இலங்கையிலும் தமிழகத்திலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வரும்வேளையில் தமிழ் மொழியின் தோற்றம்,

தமிழினத்தின் தோற்றம் தமிழின் மாற்றம் என்பதை தமிழர்கள் தெளிவாக அறிந்து ஐரோப்பிய அவுஸ்திரேலிய அமெரிக்க ஆசிய கண்டத்திலும் தமிழர்களுக்கு ஏற்படும் விபத்துகளில் கவனம் செலுத்துவதுடன் தமிழ்மொழிக்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கும் உணவு உடைப்பண்பாட்டிற்குமான முக்கிய கவனம் செலுத்தி இந்திய மயமாக்கல் உலகமயமாக்கலில் இருந்து தமிழ் மொழியையும் தமிழப்பண்பாட்டையும் தமிழர்வாழ்க்கையின் உயர்வின் உண்மையை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாட்டில் உலகத்தமிழர்கள் உள்ளோம் என்பதை உணர்வோம்.

பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments