அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ரிச்சர்ட்சன் நகரில் குடியிருந்து வந்தவர்கள் வெஸ்லி தம்பதிகள். இவர்களது வளர்ப்பு மகள் 3 வயதான ஷெரின் மேத்யூஸ் கடந்த அக்டோபர் மாதம் மாயமானதாக பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பால் குடிக்க மறுத்ததால் தாம் தண்டனை வழங்கியதாகவும், அதன் பின்னர் சிறுமி ஷெரின் மாயமானதாகவும் வெஸ்லி பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் இரண்டு கிழமைகள் கடந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பால் குடிக்கும்போது ஏற்பட்ட மூச்சுத்திணறலில் சிறுமி இறந்ததாகவும், அச்சத்தில் உடலை மறைவு செய்ததாகவும் வெஸ்லி தெரிவித்தார்.
ஆனால் பிரேதப் பரிசோதனையில் குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, வளர்ப்பு தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று சிறுமியின் வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூஸ் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தையை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மட்டுமின்றி ஆதாரங்களை சேதப்படுத்தியதாகவும் வெஸ்லி மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
அவர் மனைவி சினி மேத்யூஸ் மீது குழந்தையை பாதுகாக்காமல் கைவிட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.