இலங்கையில் சிறப்பு வாய்ந்த இந்த இடங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Report Print Raju Raju in சுற்றுலா
918Shares
918Shares
lankasrimarket.com

இலங்கை மிக எழில்மிகு இடங்களை கொண்ட அழகான நாடாகும். அங்கு போனால் நிச்சயம் பார்க்கவேண்டிய சில முக்கிய பசுமையான இடங்கள் மற்றும் நகரங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

சிகிரியா

சிகிரியா இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. 1144 அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இதை ஐந்தாம் நூற்றாண்டில் காசியப்பா மன்னர் அமைத்தார். ஐக்கிய நாட்டின் பண்பாட்டு நிறுவனத்தால் இது உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி

மலை நகரான கண்டி சிங்கள மன்னர்களின் கோட்டையாக இருந்தது. பசுமையான இடமான இங்கு ஏரிகள் மிகவும் பிரசத்திபெற்றவை ஆகும். வருடா வருடம் ஆகஸ்ட் மாதம் இங்கு இசாலா பெராஹிரா என்னும் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

யானைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொண்டாடப்படும் நிகழ்வில் கலந்து கொள்ள அந்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது அதன் சிறப்பம்சமாகும்.

நுவரெலியா

நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். எப்போதும் குளுகுளுவென வானிலை இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தானியர் காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. தேனீர் தயாரிப்புகான இடங்களும் இங்கு நிறைய உள்ளது.

கொழும்பு

கொழும்பு தான் இலங்கையின் தலைநகரமாகும். பரபரப்பான நகரான இங்கு சிறந்த ஹொட்டல்கள், தங்கும் விடுதிகள், ஷாப்பிங் மால்கள் என பல விடயங்கள் அமைந்துள்ளது.

உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டவர்கள் வருகையால் துரிதமாக வளர்ச்சியடையும் நகரமாக கொழும்பு நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

காலி

இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்றாக விளங்கும் காலி நகரம், இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ளது. கடல்களை சுற்றி இருக்கும் கோட்டையானது இங்கு சிறப்பம்சமாகும்.

இந்த கோட்டையானது 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு அமைந்திருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் இதன் பெருமையை மேலும் பறைசாற்றுகிறது.

யால தேசிய வனம்

யால தேசிய வனம் (Yala National Park) இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் ஒன்றாகும். பரப்பளவில் இரண்டாவது பெரிய தேசிய வனம் இதுவே ஆகும்.

இங்கு முலையூட்டிகளில் இலங்கைப் பனிக்கரடி, இலங்கைச் சிறுத்தை, இலங்கை யானை, காட்டு நீரெருமை, மீனவ பூனைகள் போன்ற மிருகங்களும், சாதாரண முதலை, உவர்ந்த முதலை, இந்திய நாகம் போன்ற 46 ஊர்வன வகைகள் காணப்படுகின்றன.

அனுராதபுரம்

இலங்கையின் கண்கவர் இடங்களில் அனுராதாபுரத்திற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. இந்த நகரமானது மூன்றாம் நூற்றாண்டில் உருவானது.

இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. இது பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருவது இதன் சிறப்பாகும்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்