ஈழவளநாட்டில் பிரசித்தி பெற்ற கண்ணகி அம்மன் ஆலய வரலாறு

Report Print Gokulan Gokulan in மதம்
0Shares
0Shares
Cineulagam.com

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று.

இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரியில் புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.

அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலய வரலாறு

இவ் ஆலயத்திற்கு‘பன்றித்தலைச்சி‘ எனும் பெயர் ஏற்பட்டதைப்பற்றிக் கர்ண பரம்பரைக்கதை ஒன்று கூறப்படுகின்றது. பண்டைக்காலத்திலே வள்ளுவ குலத்தைச் சேர்ந்த பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத்தொழிலையும் செய்து வந்தான்.

அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.

நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச்சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக்கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான்.

அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக்கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை நாளைய தினம் பன்றி எச்சங்களையே புதைத்ததாகச் சொல்லச் சொன்னதாகவும், மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலையே கிடைத்ததாலும், தேவிக்கு பன்றித்தலைச்சி என்ற பெயர் ஏற்பட்டதாக மரபுரைகள் சொல்கின்றன.

தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தால் அம்பாளைப் பற்றிப் பேசும் போது "கிழவி' எனக் குறிப்பிட்டுப் பேசுவோர்.

திருவிழாக்கள்

திருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூசை நடைபெறும்.

யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே படைத்து வணங்குவார்கள்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்