வரலாறு காணாத பேரழிவு: வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா

Report Print Fathima Fathima in இந்தியா
270Shares
270Shares

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்ததால் வெள்ளத்தில் மிதக்கிறது.

இதுவரையிலும் 26 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இடுக்கி அணை நிரம்பி வழிவதால், 5 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர், தொற்று நோய் பரவாமல் இருக்க சுகாதார துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மூடப்பட்ட விமான நிலையம்

கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தண்ணீர் புகுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.

கொச்சினுக்கு அருகில் இருக்கும் ஆலுவா என்ற நகரத்துக்குள் பாயும் பெரியாறில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், ஆலுவா நகரமே தற்போது தண்ணீரில் மிதந்துவருகிறது.

இதனால் வெளி உலகத் தொடர்பிலிருந்து தனித்துவிடப்பட்டிருக்கிறது ஆலுவா நகரம்.

மத்திய அரசு உதவி

கேரளாவின் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டறிந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராஜ்நாத் சிங், கேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், அதன் நிலையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காடுகளை அழித்ததே இந்நிலைக்கு காரணமாக இருக்கும் என விஞ்ஞானியும், முன்னாள், 'இஸ்ரோ' தலைவருமான, ஜி.மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்