காந்தி ஜெயந்தி அன்று கட்சி: அதிரடியாக களமிறங்கும் கமல்

Report Print Arbin Arbin in இந்தியா
193Shares
193Shares
lankasrimarket.com

நடிகர் கமல்ஹாசன் விரைவில் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்து, வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை களமிறக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபநாட்களாக தமிழக அரசை சரமாரியாக எதிர்த்து பேட்டிகளும், ட்விட்டுகளும் கொடுத்து வரும் கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் பல அமைச்சர்களின் கண்டனத்துக்கு உள்ளானார்.

தமிழக அரசு ஊழல் அரசு என்றும், ஒவ்வொரு துறை தொடர்பான ஊழலை அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்.

இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் திகதி கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த கமல், தாம் அரசியல் கற்றுக் கொள்ள வந்ததாக’ பேட்டியளித்தார்.

மேலும் வரும் 16 ஆம் திகதி கமல்ஹாசன் மீண்டும் கேரளா செல்கிறார். அங்கே கோழிக்கோடு நகரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்பாட்டில் நடக்கவிருக்கும், வகுப்புவாத வன்முறைக்கு எதிரான தேசியக் கருத்தரங்கத்தில் கலந்துகொள்கிறார்.

இத்தகைய பின்னணியில் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அரசியல் புள்ளிகளைத் தேடிச் சென்றும், தன் வீட்டுக்கு வரவழைத்தும் அரசியல் தொடர்பான நீண்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைகளின் அடுத்த கட்டமாக தற்போது கட்சிக்குத் தேவையான சட்ட திட்டங்களை உருவாக்கும் ’டிராப்ட் மேக்கிங்’ பணியில் கமல் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது கட்சி மற்றவர்களின் கட்சியைப் போல சராசரி அரசியல் கட்சியாக இருந்துவிடக் கூடாது எனவும், தனது கட்சி மூலம் மக்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் கமல் கருதுவதாக கூறப்படுகிறது.

வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் சுமார் நாலாயிரம் வேட்பாளர்களை தனது நற்பணி இயக்கம் மூலம் நிறுத்த முடிவு செய்திருக்கும் கமல், அதற்கு முன் கட்சியை தொடங்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார்.

அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தி அன்று அவர் தனது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்