சமயபுர மாரியம்மனின் பூச்சொரிதல் விழா ஆரம்பமாகியுள்ளது

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சமயபுரத்தாழ் சௌபாக்கியம் தருவாள்.. சங்கடங்கள் தீர்ப்பாள் . சதிராடிவருவாள் என்பது அடியவர்கள் கூற்று. சமயபுரத்து அம்மனின் பெருமையை கூறுவதற்கு இது ஒன்றேபோதும்.

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில், அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய அருள் அம்சமாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.

சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடி வருவோருக்கு மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார்.

மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது.

துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக அம்மனிற்கு படைக்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.

இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது.

இதைத்தொடர்ந்து கோவில் அர்ச்சகர் யானை மீது பூக்கூடையில் பூக்களை வைத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க வர, பக்தர்கள் பூக்கூடைகளிலும், தட்டுகளிலும் பூக்களை சுமந்து ஊர்வலமாக சென்றுள்ளனர்.

ஊர்வலம் தேரோடும் வீதி, கடைவீதி வழியாக கோவிலை வந்தடைந்ததும், காலை 7.05 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து பக்தர்கள் சுமந்து வந்த பூக்களை கோவில் அர்ச்சகர்கள் அம்மனின் மேலே கொட்டினர்.

தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடைபெற்றபோது பக்தர்கள் “ஓம் சக்தி, மகா சக்தி“ என பக்தி கோஷங்களை எழுப்பி சமயபுர அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.

மேலும் மருதூர், வீ.துறையூர், மாகாளிகுடி, பனமங்கலம் போன்ற கிராமங்களில் இருந்து பக்தர்கள் சுமந்து வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டது.

அதோடு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும், மாலை அணிந்தும் பாதயாத்திரையாக வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.

பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 2, 3 மற்றும் 4-ம் வார பூச்சொரிதல் விழா சமயபுர அம்மனிற்கு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்