அன்று சாலையில் சமோசா விற்பனை: இன்று கோடிகளில் தொழில்! சாதனை மனிதனின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
715Shares
715Shares
lankasrimarket.com

ஹாஃபா புட்ஸ் அண்ட் ப்ரோசன் புட்ஸ் என்ற உணவு நிறுவனம் கோழி சமோசா, ப்ரெட் பன்னீர் ரோல், வெஜ் ரோல், கோழி கட்லெட் போன்ற பல்வேறு உணவு பொருட்களை தயாரிக்கிறது.

இந்த பொருட்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஹொட்டல்கள், விமானத்தின் சமையலறைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதன் நிறுவனர் பெயர் ஹாஜா ஃபுனியாமின் (36) .

தமிழ்நாட்டின் சென்னையில் வாழும் சாதாரண குடும்பத்தில் ஹாஜா பிறந்தார். குடும்பச் சூழல் காரணமாக ஆறாம் வகுப்புப் படிக்கையில் இருந்து தனது தாய் செய்யும் சமோசாக்களை சாலையில் ஹாஜா விற்பனை செய்வார்.

ஆறாம் வகுப்பில் மூன்று முறை தோல்வியடைந்த ஹாஜா பின்னர் படிப்பை நிறுத்தினார்.

பின்னர், சிறு சிறு வேலைகளை குறைந்த சம்பளத்தில் பார்த்து வந்த ஹாஜா 20 வயதில் கோழி பக்கோடா கடை போட்டார்.

மாதம் 8000 வருமானம் வந்த நிலையில் இரண்டாண்டுகள் கழித்து சென்னையில் பறவை காய்ச்சல் பிரச்சனை வந்ததால் இவரின் கோழி பக்கோடா வியாபாரம் படுத்தது.

இதனால் ஹாஜாவுக்கு 40000 ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த சமயத்தில் அவருக்கு திருமணமாக, மனைவி பரிஷாவுடன் சேர்ந்து சமோசா கடையை கடன் வாங்கி ஹாஜா தொடங்கினார்.

சமோசாக்களை பல டீ கடைகளுக்கு விற்று வந்த நிலையில், ஹாஜாவின் உழைப்பு மற்றும் சமோசாவின் சுவை காரணமாக தொழில் வேகமாக வளர்ந்து மாதம் ரூ.50,000 வருமானம் வந்தது.

2006-ல் தனியார் குளிரூட்டப்பட்ட உணவுகள் விற்கும் நிறுவனம் சமோசாக்களை அதிகளவில் செய்து தர ஹாஜாவுக்கு ஆர்டர் கொடுத்தது.

இதையடுத்து ஆட்களை வேலைக்கு சேர்த்து கொண்ட ஹாஜா சுவையான சமோசாக்களை செய்து கொடுத்து அசத்தினார்.

பிறகு மாதம் 2 லட்சம் ரூபாய் சமோசாக்கள் செய்து கொடுக்க நிறுவனம் வாய்ப்பு கொடுக்க தனியார் அறக்கட்டளை மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதற்கான எந்திரங்களை வாங்கிய ஹாஜா வாடகைக்கு ஆட்களை நியமித்து தொழிலை திறன்பட செய்தார்.

அப்போது திடீரென தனியார் நிறுவனம் ஹாஜாவுக்கு கொடுத்த ஆர்டரை ரத்து செய்தது. சமோசா போன்ற குறைந்த விலையுள்ள பொருள் உற்பத்தியை நிறுத்தவே இதை நிறுவனம் செய்தது.

அப்போது சென்னையில் உள்ள ஒரு ஹொட்டல் ஹாஜாவிடம் சமோசா செய்யும் ஆர்டரை கொடுத்தது.

இதையடுத்து நகரில் பல ஹொட்டல்களைக் கண்டறிந்து உணவுகளை ஹாஜா சப்ளை செய்ய ஆரம்பித்தார்.

நல்ல லாபம் வர தொடங்க ஹாஃபா புட்ஸ் அண்ட் ப்ரோசன் புட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர் சமோசா மட்டுமின்றி பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினார்.

2011ல் 50 லட்ச ரூபாய் வர்த்தகத்தை லாபம் பார்த்த நிறுவனம் இந்த ஆண்டு ரூ.1.5 கோடி வர்த்தகத்தை கொடுத்துள்ளது.

தொழிலை மேம்படுத்த மிகபெரிய தொழிற்கூடம் ஒன்றை அமைக்கும் திட்டமும் ஹாஜாவிடம் உள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்