ஆசிரியர் தின ஸ்பெஷல்! டாக்டர் ராதாகிருஷ்ணன் பற்றிய சுவாரசிய தகவல்கள்

Report Print Deepthi Deepthi in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

முன்னாள் ஜனாதிபதி, தத்துவ ஆசிரியர், டாக்டர் சர்வப்பள்ளி ராதகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5 ம் திகதி தான் ஆசிரியர் தினமாக மாறியது, இது அனைவரும் அறிந்தது. அதனால், ஆசிரியர் என்ற வார்த்தையிலிருந்து அவர் எப்போதும் பிரிக்க முடியாதவர் ஆனார்.

அதேசமயம், ஆசிரியர் தின கொண்டாட்ட தளம் விரிவானது அது ராதாகிருஷ்ணனை மட்டுமே மையப்படுத்தியது இல்லை.

ஆனாலும், இந்த ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாய் விளங்கிய, அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்வது, நல்ல ஆசிரியர்கள் பெருகுவதற்கான ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

ஏழை மாணவர்

ஏழையாக இருந்து, தங்களுடைய அறிவு மற்றும் நல்ல அனுபவங்களால் உயர்ந்த பெரிய மனிதர்கள்தான் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றுள்ளனர். இது ராதகிருஷ்ணனுக்கும் பொருந்தும்.

தென்னிந்தியாவில் சாதாரண ஒரு ஏழைக் குடும்பத்தில் 1888 ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை ஆரம்பத்தில் அவரை ஆங்கிலம் படிக்க வைக்க சம்மதிக்கவில்லை.

அவரை மதம் சார்ந்த விஷயங்களை கற்று அதில் ஒரு குருவாக விளங்க வைக்கவே விரும்பினார். பிறகு, தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு, திருத்தணியில் உள்ள ஒரு பள்ளிக்கு அனுப்பினார்.

புத்திசாலி மாணவரான அவருக்கு பெரும்பாலும் அரசு உதவித்தொகையிலே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1909 ல் அவருக்கு மெட்ராஸ் பிரசிடென்ஸி கல்லுரியில் தத்துவ துறையில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து இந்திய இலக்கியங்களில் உள்ள தத்துவங்களையும் மதம் சார்ந்த இதிகாசங்களில் உள்ள தத்துவ சாரங்களையும் ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தார். அதுபற்றி இன்னும் விரிவாக சிந்தித்து மக்களுக்கு பயன்படுமாறு விளக்கவும் செய்தார்.

வெள்ளைத்தோல் கறுப்புத்தோல் விளக்கம்

நிறவெறி பிரச்சினைகள் உலகில் தலைவிரித்தாடிய காலத்தில் வாழ்ந்ததால் அதுபற்றி அவர் ஆழமான ஒரு விளக்கத்தை கொடுத்தார்.

கடவுள் முதன்முதலாக ரொட்டி சுடுகிறார். அனுபவமில்லாமல் கருக விட்டு எடுத்தார். அப்படி உருவாக்கப்பட்டவர்கள்தான் ஆப்பிரிக்காவில் உள்ள கறுப்பர் இனம்.

அடுத்த ரொட்டியை கருகவிடாமல் எடுத்துவிட வேண்டுமே என்ற அவசரத்தில் சரியாக வேகாமலே எடுத்துவிட்டார். அப்படி உருவாக்கப்பட்டவர்கள்தான் வெள்ளையர்கள் இனம்.

இந்த இரண்டு அனுபவத்துக்குப் பிறகு, எச்சரிக்கையாக சரியான பதத்தில் மூன்றாவது ரொட்டியை சுட்டு எடுத்தார். அவர்கள்தான் இந்தியர்கள் என்றார்.

நிறவெறியில் தீவிரம் காட்டியவர்களும் புன்முறுவல் பூக்கும் அளவுக்கு அதை நீர்த்துப்போக செய்யும் இந்த விளக்கம் உலக அளவில் பிரபலம்.

மாணவர்களிடம் செல்வாக்கு

1918 ல் அவர் தத்துவப் பேராசிரியராக மைசூர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு பணிசெய்த 3 ஆண்டுகளில் மாணவர்கள் மத்தியில் ஒரு நல்ல தத்துவ ஆசிரியராக செல்வாக்கடைந்தார்.

பிறகு அவருக்கு, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியாவின் முதன்மையான தத்துவ மற்றும் ஒழுக்க அறிவியல் பதவியான அரசர் ஐந்தாம் ஜார்ஜ் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

அங்கு முதன்முதலாக சென்றபோது, மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து ரயில் நிலையம் வரை மாணவர்கள் திரண்டு நின்று மலர் மாலைகள் போட்டு வழியனுப்பினர்.

பதவிகளும் பாராட்டுகளும்

1929 ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மான்செஸ்டர் கல்லூரியின் முதல்வர் ஜெ. இஸ்டின் கார்பெண்டெர் தனது பதவியை காலிசெய்தபோது, டாக்டர் ராதாகிருஷ்ணன் அந்த பதவியை அலங்கரிக்க அழைக்கப்பட்டார்.

மேலும், அவரின் கல்விப்பணியை பாராட்டி 1931 ல் பிரிட்டிஷ் அரசு அவருக்கு ’சர்’ பட்டம் வழங்கியது. ஆனாலும், ஆடம்பரமான பட்டத்தைவிட படித்து வாங்கிய ’டாக்டர்’ பட்டமே போதும் என தன் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டார்.

அதுமட்டுமல்ல, காந்தி, நேரு போன்றவர்கள் சுதந்திரத்திற்காக பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும்போது, பிரிட்டிஷார் தரும் பட்டம் பதவிகளை அனுபவிப்பதுகூட அடிமைத்தனத்தை அவர் ஏற்றுக்கொள்வதாகிவிடும் அல்லவா?

ராதாகிருஷ்ணன் இந்தியாவின் ஜனாதிபதி பதவி ஏற்றபோது, உலகின் மிகச்சிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவராக விளங்கிய பெர்ட்ரண்ட் ரஸ்சல் வரவேற்றார்.

அப்போது, அவர், ”இந்தியா ராதாகிருஷ்ணனை ஜனாதிபதி ஆக்கியிருப்பது தத்துவ துறைக்கு செய்யும் மரியாதை. நானும் ஒரு தத்துவவாதி என்ற அடிப்படையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், தத்துவ ஞானியான பிளாட்டோ அரசராக ஆசைப்பட்டார் ஆனால், அது கைகூடவில்லை. ஆனால், இந்தியா ஒரு தத்துவ ஞானியை ஆட்சிபீடத்தில் வைத்திருப்பது ஒரு நல்ல காணிக்கை” என்று வாழ்த்தினார்.

ஆசிரியர் தினத்திலேயே ஒரு நல்ல ஆசிரியருக்கான முன்னுதாரணமும் டாக்டர் ராதாகிருஷ்ணன் வடிவில் சேர்ந்திருப்பது நல்ல நீதி.

தன்னை எப்போதுமே மாணவர்களாக உணர்ந்தால், எண்ணற்ற ஆசிரியர்கள் கல்வி நிலையங்களுக்கு வெளியிலும் இருந்து கற்பிக்கவே செய்கிறார்கள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments